உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

-

கண்டுபிடித்து அவற்றைப் படி எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். இன்னும் பல நூற்றுக்கணக்கான நடுகற்கள் கண்டுபிடிக்கப்படாமலே யுள்ளன.

தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணையியலில் போரில் மடிந்த வீரர்க்கு நடுகல் நடுவது பற்றி இவ்வாறு கூறப்படுகிறது.

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்

(சீர்த்த மரபில் பெரும்படை) வாழ்த்தலென்று இருமூன்று மரபில் கல்.

போரில் இறந்த வீரனுக்கு நடுகல் நட்டு அவனுடைய வீரத்தைப் போற்றினார்கள். அதற்குரிய கல்லை, மலைக்குச் சென்று தேர்ந்தெடுத்து, அதைக் கொண்டுவந்து நீரில் இட்டு நீர்ப்படை செய்து பிறகு, அந்த வீரனுடைய பெயரையும் புகழையும் அக்கல்லில் எழுதி, அதை நட வேண்டிய இடத்தில் நட்டு, நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து சிறப்பு செய்து வாழ்த்துவார்கள். இவை ஐந்தும் நடுகல் நடுவதற்குரிய ஐந்து துறைகளாகும்.

(மேற்சொன்ன தொல்காப்பியச் சூத்திரத்தில் 'சீர்த்த மரபில் பெரும்படை' என்று ஒரு தொடர் கூறப்படுகிறது. பெரும்படை என்பது போர்க்காலத்தில் மடிந்துபோன அரசனுக்கு எடுக்கப்படுகிற பள்ளிப்படை. இது பற்றி இங்கு ஆராய்ச்சி இல்லை. வடக்கிருந்து (பட்டினி கிடந்து) உயிர் விட்டவருக்கும் கண்ணகி போன்ற வீர பத்தினிக்கும் நடுகல் நட்டுச் சிறப்பு செய்வதும் உண்டு. கணவனோடு தீயில் விழுந்து உடன் கட்டையேறின மகளிர்க்கும் நடுகல் நடுவது உண்டு. இது மாஸ்திக்கல் (மாசதிக்கல்) என்று பெயர் பெறும். இந்த வகையான நடுகற்களைப் பற்றியும் இங்கு ஆராய்ச்சி இல்லை.

பகைவருடைய (மாற்றாருடைய) ஊரில் போய் அங்குள்ள தொறுக்களைக் (எருமை, பசுமந்தைகளை) கவர்ந்து கொண்டு வருவது பழந்தமிழகத்தில் அடிக்கடி நடந்த சாதாரண நிகழ்ச்சி. இது களவுக் குற்றமாகக் கருதப்படவில்லை. இந்த வெட்சிப் போரைச் சிற்றரசர்களும், வீரத்தில் சிறந்த மறவர்களும், அரசர்களுங்கூட செய்தார்கள். முள்ளூர் மன்னன் (மலையமான் திருமுடிக்காரி) இரவில் குதிரை மேல் சென்று அயலூரிலிருந்து ஆனிரைகளைக் கவர்ந்து கொண்டு வருவது வழக்கம். இதைக் கபிலர் கூறுகிறார்.