உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

மதத்தைக் கொண்டுவந்து பரவச் செய்த பௌத்த பிக்குகள் பிராமி எழுத்தையுங் கொண்டுவந்து பரவச் செய்தார்கள். அந்தக் காலத்திலேயே சமண சமயத்தைப் பரப்பி வந்த ஆருகத மதத்து முனிவர்களும் பிராமி எழுத்தையும் பரப்பினர்.

தமிழகத்திலும், தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் பௌத்த சமண மதங்கள் விரைவாகப் பரவியதற்குக் காரணம் என்ன வென்றால், அந்த மதப் பரப்புநர்கள் அந்தந்த நாட்டுத் தாய் மொழியிலேயே தங்கள் மதங்களைப் பரப்பியதுதான். சமயப் பரப்புப்பணியை, நாட்டு மக்களுக்குத் தெரியாத மொழிகள்மூலம் செய்யக் கூடாது என்பதும், அந்தந்த நாட்டுத் தாய்மொழியிலேயே மதப் பரப்புதல் செய்ய வேண்டும் என்பதும் பௌத்த சமண சமயங்களின் முக்கியமான கொள்கை. ஆகவே, தமிழகத்துக்கு வந்து பௌத்த சமண சமயங்களைப் பரவச் செய்த தேரர்களும், முனிவர்களும், தங்கள் மதக் கொள்கைகளைப் பாலி, அர்த்தமாகதி (பிராகிருத) மொழிகள் வாயிலாக வளர்க்காமல், தமிழ்மொழி வாயிலாகவே வளர்த்தார்கள். ஆகவே, பௌத்த சமண சமயங்கள் அக் காலத்தில் தமிழகத்தில் விரைவாகப் பரவின.

பிராமி எழுத்து

ஆனால், அவர்களுடைய மத நூல்கள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருந்தபடியாலும், அந்த நூல்களில் எழுதப்பட்டிருந்த எழுத்து பிராமி எழுத்தாக இருந்தபடியாலும் அவர்கள் மூலமாகப் பிராமி எழுத்து தமிழகத்தில் நுழைந்தது. இவ்வாறு பௌத்த, சமண சமயங்களோடு பிராமி எழுத்தும் தமிழ் நாட்டில் கால் ஊன்றிது. இவ்வாறு கடைச்சங்க காலத்தில், கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் பிராமி எழுத்து புகுந்தது. அக்காலத்தில் வடஇந்தியா முழுவதும் பிராமி எழுத்து வழங்கி வந்தது. அந்தப் பிராமி எழுத்தைத்தான் அவர்கள் தமிழகத்துக்குக் கொண்டு வந்தார்கள்.

அவர்கள் வருவதற்கு முன்னே தமிழகத்தில் தமிழர் ஒருவகையான தமிழ் எழுத்தை எழுதி வந்தனர். அந்தத் தமிழ் எழுத்து, பிராமி எழுத்து வந்த உடனே மறைந்துவிடவில்லை. புதிதாக வந்த பிராமி எழுத்து தமிழகத்தில் பரவுவதற்குச் சில காலஞ் சென்றது. பிராமி எழுத்து தமிழகத்தில் பரவுவதற்கு ஒரு நூற்றாண்டாவது சென்றிருக்க வேண்டும்.