உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள் 27

மறக்கப்பட்டு மறைந்து கிடந்தன. மறக்கப்பட்டு மறைந்து கிடந்ததற்குக் காரணம், இடைக் காலத்திலே புதிய புதிய எழுத்துக்கள் தோன்றி வழங்கி வந்ததுதான்.

என்ன மொழி?

கி.பி. 4ஆம் நூற்றாண்டில் மறைந்துபோன பிராமி எழுத்து 20ஆம் நூற்றாண்டில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தைச் சேர்ந்த ஆங்கிலேயர் ஒருவர் 1906ஆம் ஆண்டு பாளையங்கோட்டைக்கு அடுத்த மருகால்தலை என்னும் ஊருக்குச் சென்றவர், அவ்வூருக்கு அருகில் உள்ள குன்றுகளுக்குச் சென்றார். அங்கு ஒரு குன்றில் இயற்கையாக அமைந்துள்ள குகையின் வாயிலின் அருகில் சென்ற போது குகைவாயிலின் மேற்பாறையில் எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருப்பதைக் கண்டார். பிறகு அவர், அந்த எழுத்துக்களைப் பற்றித் தொல் பொருள்-ஆய்வுத்துறை மேலாளருக்குத் தெரிவித்தார். தொல்பொருள் ஆய்வுத்துறை அலுவலர் மருகால்தலைக் குன்றுக்குப் போய் அங்கிருந்த எழுத்துக்களைப் படி எடுத்து வந்தனர். பிறகு இந்தச் செய்தியை 1907ஆம் ஆண்டு எபிகிராபி ஆண்டு அறிக்கையில் வெளியிட்டார்கள். இந்த எழுத்துக்களை அவர்கள் அப்போது படிக்கத் தெரியாமல் இருந்தார்கள். இந்தக் கல்வெட்டெழுத்து, பிராமி எழுத்தாக இருக்கிறபடியால் இந்தக் கல்வெட்டின் வாசகம் பாலி மொழியில் எழுதப்பட்டதாக இருக்கவேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். இதற்கு முன்பே வட இந்தியாவிலும், இலங்கையிலும், பிராமி எழுத்துச் சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அவை பாலி (பிராகிருத) மொழியில் எழுதப்பட்ட பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள். மருகால் தலை பிராமி கவ்வெட்டும் பாலி மொழியில் எழுதப்பட்டதென்று அவர்கள் ஊகித்தார்கள். அவர்கள் தங்களுடைய அறிக்கையில் ‘அசோக மாமன்னருடைய சாசன எழுத்துக்களைப் போன்ற எழுத்தினால் இந்தப் பாலிமொழிச் சாசனம் எழுதப்பட்டிருக் கிறது. பாலி மொழியில் எழுதப்பட்டிருக்கிறபடியால், அந்தப் பழங்காலத்தில் பாண்டி நாட்டில் பாலிமொழி தெரிந்திருந்தது என்பது தெரிகிறது” என்று எழுதினார்கள்.2 இது பிராமி எழுத்தினால் எழுதப்பட்ட தமிழ்மொழி வாசகம் என்பதை அறியாமல் அவர்கள் பாலி மொழி வாசகம் என்று கூறினார்கள்.

66