உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

அரிட்டாபட்டி கழுகுமலை

மதுரை மாவட்டம் மதுரை தாலுகாவில் உள்ளது அரிட்டாபட்டிக் கிராமம். (இவ்வூருக்கு மாங்குளம் என்றும் பெயர் உண்டு) அரிட்டா பட்டி மதுரையிலிருந்து வடகிழக்கே 14வது கல்லில், மேலூருக்கும் அழகர் மலைக்கும் இடையில் இருக்கிறது. அரிட்டா பட்டியைச் சேர்ந்த மாங்குளம் என்னும் ஊரில் கழுகுமலை என்னுங் குன்றுகள் உள்ளன. கழுகுமலைக்கு ஊவாமலை என்னும் பெயருங் கூறப்படுகிறது. கழுகுமலையின் கிழக்குத் தாழ்வரையில் ஐந்து குகைகளும் அக் குகைகளில் கற்படுக்கைகளும் காணப்படு கின்றன. பழங்காலத்தில் பௌத்த சமய முனிவர்கள் இந்தக் குகைகளில் தங்கியிருந்து தவஞ் செய்தார்கள் என்பதை இங்குள்ள கற்படுக்கைகள் தெரிவிக்கின்றன. கற்படுக்கைகள் சிலவற்றில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளன. மற்றும், இங்குள்ள இரண்டு குகைகளின் மேற்புறத்தில் இரண்டு பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள் காணப் படுகின்றன. இந்த எழுத்துக்களை ஆராய்வதற்கு முன்னர், அரிட்டாபட்டி, கழுகுமலை என்னும் பெயர்களின் வரலாற்றை அறியவேண்டும்.

அரிட்டாபட்டி

அரிட்டாபட்டி என்னும் பெயர் பௌத்த சமயத் தொடர்புடையதாகத் தெரிகிறது. இலங்கையை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட தேவனாம்பிய திஸ்ஸன் என்னும் அரசனுடைய அமைச்சன் அரிட்டன் (அரிஷ்டன்) என்பவன். அரிட்டனை மகாஅரிட்டன் என்றுங் கூறுவர். தேவனாம்பிய திஸ்ஸன் காலத்தில் பாரதநாட்டை அரசாண்ட அசோக சக்கரவர்த்தி இலங்கையில் பௌத்த மதத்தைப் பிரசாரஞ் செய்யப் பௌத்த பிக்குகளை அனுப்பினார். தேவனாம்பிய திஸ்ஸன் அசோக சக்கரவர்த்தியிடத்தில் அமைச்சனான அரிட்டன் தலைமையில் ஒரு தூதுக்குழுவை அனுப்பினான். அசோக சக்கரவர்த்தி புத்த கயையிலிருந்து (போதி) அரச மரக்கிளையையும் பிக்குணி சங்கமித்திரை யையும் இலங்கைக்குக் கடல் வழியாகக் கப்பலில் அனுப்பியபோது அவர்களை அழைத்துக்கொண்டு இலங்கைக்குக் கொண்டுவந்து சேர்த்தவனும் அமைச்சனான அரிட்டனே. பிற்காலத்தில் அரிட்டன் பௌத்த மதத்தைச் சேர்ந்து பௌத்த பிக்குவாகிப் பௌத்த மதப் பிரசாரஞ் செய்தார். அவர் பாண்டி நாட்டுக்கு வந்து மாங்குளத்தில் தங்கினார். அவர் தங்கியிருந்த கிராமத்துக்கு அரிட்டாபட்டி என்று பெயர் வந்தது. அஃதாவது அரிட்டர் இருந்த ஊர் என்பது பொருள்.