உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

141

என்ற அடிகளால் இது நன்கு புலப்படுகின்றது. பெயர் வேறுபாடு முதலிய வற்றால் இது கண்ணகியின் சரித்திர மன்று என்பது வெளிப்படை னால், இதனின்றும் கண்ணகி வரலாறு பிறந்ததாகலாமென எளிதில் ஊகிக்கலாம்." (பக்கம 133-134)

பிறிதொரு செய்தி, கண்ணகி தனது காதலனைப் பிரிந்த துயராற்ற மாட்டாது ஒரு முலையைத் திருகி எறிந்தாள் என்பது. இதுவும் நற்றிணையிற் காணப்படும் ஒரு செய்தியோடு ஒத்துள்ளது:

எரிமருள் வேங்கைக்

கடவுள் காக்கும்

ஒருமுலை யறுத்த திருமா வுண்ணி

என அந்நூற் செய்யுளொன்று கூறுகிறது. இங்குக் குறித்த வரலாறு மறைந்துவிட்டது. எனினும், தன்மீது அன்பு அற்றுத் துறந்து தனக்கு அயலான்போலாகிவிட்ட காதலனைப் பற்றிக் கவலைகொண்டு வருந்தித் தனது ஒரு முலையை அறுத்தெறிந்த ஒருத்தியின் சரித்திரமே அது வெளிப்படுப்பது என்பது புலனாகின்றது. நற்றிணை அடிகளை ஞாபகப்படுத்திக்கொண்டு,

பொலம்பூ வேங்கை

நலங்கிளர் கொழுநிழல்

ஒருமுலை யிழந்தாளோர் திருமா பத்தினி

என்ற பதிகத்தின் அடிகள் தோன்றின என்பதும் எளிதில் ஊகிக்கக் கூடியதே. வேங்கை நிழற்கீழ்க் கண்ணகி வந்து நின்றால் என்பது மேலைப் பதிக அடிகளாலும், கட்டுரை காதை (91-92), குன்றக் குரவை (14-23), குன்றக் குரவை இறுதிப் பாட்டுமடை (16-21), அடிகளில் வருவனவற்றாலும் உணரலாகும். நற்றிணை அடியிலும் இவ்வேங்கை பயின்று வருதல் காணலாம். இங்ஙனம் வரும் ஒற்றுமைகளை மனத்துள் கொண்டு, நற்றிணையுரைகாரர் 'திருமாவுண்ணி யென்பது கண்ணகியைக் குறிக்கின்றதுபோலும்' என்றெழுதினர். இவர் துணிவு எவ்வாறாயினும் மேற்குறித்தன போன்ற செய்திகளே கால அமைவிற் கண்ணகி வரலாறாக வளர்ந்து பரிணமித்தன எனக் கொள்ளுதல் தவறாகாது." (இலக்கிய மணிமாலை பக்கம் 147-148)