உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

எனவே, கொங்கை அறுத்தல், முலை குறைத்தல் என்பது மெய் யாகவே அதே பொருளுடையது அல்ல என்பது, கற்புள்ள இள மங்கை யரின் சிற்றின்ப வாழ்வு அவர்தம் காதலரால் புறக்கணிக்கப்பட்டது காரணமாக அறுபட்டது, அழிந்து விட்டது என்பதுதான் இச் சொல்லின் உண்மைப் பொருள் என்பதும் அறிகிறோம். நற்றிணைச் செய்யுளும் இக் கருத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.

2

இனி, கண்ணகியாரைப் பார்ப்போம் கண்ணகிக்கும் கோவ லனுக்கும் காதல் மணம் நிகழவில்லை. அக் காலத்துக் செல்வப் பிரபுக் களின் வழக்கப்படி இவர்களின் பெற்றோர் இவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தார்கள். அப்போது கோவலனுக்கு வயது பதினாறு. கண்ணகிக்கு வயது பன்னிரண்டு. கோவலன், மாதவி என்னும் ஆடல் மங்கையின் வலையில் சிக்கி அவளிடத்திலேயே தங்கிவிட்டான். இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகழிகிறது. கற்புடைய கண்ணகி மண வாழ்க்கை இழந்து பன்னிரண்டு ஆண்டு காத்திருக்கிறாள். கடைசியில் கோவலன் மாதவிமேல் வெறுப்படைந்து கண்ணகியிடம் வருகிறான். நெடு நாட்களாகக் கணவன் அன்பை இழந்திருந்த கண்ணகி பெரு மகிழ்ச்சி யடைகிறாள். கோவலன் மதுரைக்குப் புறப்படுகிறான். கண்ணகியும் வீடு வாசல், தாய் தந்தையர், மாமன் மாமியார், ஏவலாளர் எல்லோரையும் விட்டு ஒருவருக்கும் சொல்லாமல் கோவலனுடன் புறப்பட்டுச் செல்கிறாள். மதுரையை அடைந்து மாதரியின் இல்லத்தில் தங்கியபோது, கோவலன் கண்ணகிக்குத் தான் செய்த கொடுமையைக் கூறி வருந்துகிறான். கண்ணகியை வாயாறப் புகழ்கிறான். புதிய நல்வாழ்வு பெற்றதாகக் கண்ணகி மகிழ்கிறாள்.

பகல் உணவு அருந்திக் கோவலன் சிலம்பை விற்பதற்கு நகரத்திற்குள் செல்கிறான். கோவலன் வருகையை மகிழ்ச்சியோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த கண்ணகிக்குக் கோவலன் கொலையுண்ட செய்தி எட்டுகிறது. இச் செய்தி அவள் மேல் இடி விழுந்ததுபோல் இருந்தது. அவள் கண்டுகொண்டிருந்த இன்பக் கனவும் மகிழ்ச்சியும் மறைந்தன. புதிதாக இன்பவாழ்வு அடையப்போகிற தறுவாயில், எதிர்பாரா வண்ணம் கணவனை இழந்தாள். அவள் வாழ்வு அறுந்துவிட்டது. முலை குறைத்தல் அல்லது குறைமுலை என்னும் சொல்லுக்கு நேர் மாறான கருத்துள்ள நிறைமுலை என்னும் சொல்லும் முற்காலத்தில் வழங்கியதாகத் தெரிகிறது.