உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

157

கற்பனை யமையாத 'காவியம்' காவிய மாகக் கருதப்பட வில்லை. கற்பனையே காவியப் புலவனின் இயல்பு கற்பனை இல்லாத காவியம் சுவைக்காது. ஆகவே, காவியப் புலவரான இளங்கோவடிகள், கண்ணகி வாழ்க்கை இழந்ததை, உண்மையிலேயே கொங்கையைக் குறைத்தாகக் கற்பனை செய்து மதுரை நகரம் எரிந்ததற்கு அதை காரணமாகக் கூறுகிறார். இவ்வாறு கற்பனை செய்தபடியினாலே, இது இக்காவியத்துக்கும் புதுமையைத் தந்து வாசிப்பதற்கு உணர்ச்சி யூட்டுகிறது.

இதுகாறும், கொங்கை குறைத்த என்பது இள வயதுள்ள மகளிர் பிள்ளை பேறடைவதற்கு முன்பே கணவனால் கைவிடப்பட்டவர் என்னும் பொருளுடையது எனக் கண்டோம். இதன் மெய்ப் பொருளை அறியாதவர், கண்ணகியார் மெய்யாகவே அவ்வுறுப்பை அறுத்துக் கொண்டார் என்று கருதிக் கொண்டனர். இவ்வாறு செய்தவர் கண்ணகி ஒருவர் தாம் என்றும், ஒரு முலை யறுத்த திருமாவுண்ணியுங்கூடக் கண்ணகிதான் என்றும் முடிவுகொண்டனர். அதுமட்டுமா கொங்கை அறுத்தது ஒரு பழைய கதை என்றும், அது திருமாவுண்ணியின் கதை என்றும், அந்தக் கதையிலிருந்து கண்ணகியின் கதை கற்பிக்கப்பட்டது என்றும் எழுதிவிட்டார்கள். உண்மைப் பொருளை அறிந்திருந்தால் இவ்வாறு எழுதியிருக்கமாட்டார்கள். கண்ணகியின் கதை வெறும் கட்டுக் கதை யன்று காவியப் புலவரின் கற்பனைகளைக்களைந்து விட்டால் அதில் அசம்பாவிதமான நிகழ்ச்சி ஒன்றும் கிடையாது. நிற்க.

வையாபுரிப்பிள்ளையவர்கள், இன்னொரு செய்தியைப் பொருத்தம் இல்லாமல் கூறுகிறார். வின்ட்டர்னிட்ஸ் என்னும் ஜெர்மானியர், தாம் எழுதிய இந்திய இலக்கிய வரலாறு என்னும் நூலிலே பௌத்த நூலிலிருந்து, தன் மார்பை அறுத்த ஒருபெண்ணின் கதையாக குறிப்பிடுகிறார். இதைப் பிள்ளையவர்கள் சுட்டிக்காட்டி, திவ்விய வதானம், ஜாதகமாலை என்னும் பௌத்த நூல்களில் முலைகளைப் பிய்த்தெறிந்தகதை கூறப்படுகின்றது. ஆகவே, இந்தக் கதை (கண்ணகியின் கதை) ஆதியில் பௌத்தரிடமிருந்து வந்ததென்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாம் என்று எழுதுகிறார்:

"We hear Buddhist Divyavadana and jatakamala stories in which tearing of breasts occur. And we might easily that the story was originally buddhist origin” (page 147 History of Tamil Language and Literature.