உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

299

நூல்கள் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? அப்படியானால் அதற்குச் சான்று என்ன? முன்னமே தொகுக்கப்பட்ட தொகை நூல்களுக்கு இவர் பிற்காலத்தில் கடவுள் வாழ்த்துப் பாடினார் என்றால், தொகுக்கப்பட்ட காலத்திலேயே கடவுள் வாழ்த்துப் பாடியதாக வரலாறு கூறுகிறது. ஆகவே, அரசாங்கத்துச் சாசன இலாகா அறிக்கை தவறானது.

அகநானூறு, புறநானூறு முதலிய எட்டுத்தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவர்; அரசாங்க அறிக்கை கூறுகிற படி பாரத வெண்பா பாடிய

பெருந்தேவனார் அல்லர்.

சின்னமனூர் செப்பேட்டுச் சாசனம், பாண்டியர் வழியில் வந்த ஒரு அரசனைக் கூறும்போது, "மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” செங்கோல் நடத்தினான் என்று கூறுகிறது. அந்த மகாபாரதம் மறைந்து போயிற்று. அதற்குப் பிறகு மற்றொரு பெருந்தேவனார் என்பவர் மகாபாரதத்தைத் தமிழில் இயற்றினார். அது பெரிதும் அகவற்பாவினாலானது. அப்பாரதமும் இப்போது முழுவதும் கிடைக்க வில்லை. சில செய்யுள்கள்மட்டும், தொல்காப்பிய உரையில் உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டடப்பட்டுள்ளன. அந்தப் பாரதம் பாடிய பெருந்தேவனார் காலத்தில்தான், அகம், புறம், நற்றிணை, குறுந்தொகை முதலிய எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்டு, அவரால் கடவுள் வாழ்த்துச் செய்யுள்கள் பாடப்பட்டன. அது நிகழ்ந்தது கி.பி. 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டிலாகும். அதாவது, சங்கத் தொகை நூல்களைக் கூறுகிற அப்பர் சுவாமிகளுக்கு முற்பட்ட காலமாகும். எனவே, கி.பி. ஒன்பதாம்நூற்றாண்டிலிருந்த பாரத வெண்பா பாடிய பெருந்தேவனார் சங்கத்தொகை நூல்களைத் தொகுத்தவரும் அல்லர்; அவற்றிற்குக் கடவுள் வாழ்த்துப் பாடினவரும் அல்லர்.

மேலும், 1907-ஆம் ஆண்டுச் சாசன அறிக்கையிலும் இதே தவறு செய்யப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையைத் தமிழ்ப்படுத்திக் கீழே தருகிறேன். “தமிழில் பாரத வெண்பா பாடிய பெருந்தேவனார் கடைசி மதுரைக் கல்லூரியில் (தமிழில் கடைச் சங்கம் என்பர்) ஒரு அங்கத்தினராக இருந்தார் என்று பரம்பரைச் செய்தி கூறப்படுகிறது. இச்செய்தியில் ஏதேனும் உண்மை இருக்குமானால், சின்னமனூர் பெரிய செப்பேடு கூறுகிற தமிழ் மகாபாரதம் அவர் எழுதியதாக