உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

301

கருதுகிறார். அதன் பிறகு, இரண்டு பெருந்தேவர்களும் வெவ்வேறு காலத்தவர் என்று சரியான முடிவுக்கு வருகிறார். அதுவும் உறுதியற்ற முடிவு என்று கூறுகிறார். பிறகு கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் கடைச் சங்கம் தோன்றியது என்று தவறான முடிபு கூறுகிறார். இதைச் சான்று காட்டி மறுக்க முடியுமாயினும், இது இடம் அன்று. ஆகவே இதைப் பற்றிப் பேசாமல் விடுகிறோம். பாரதம் பாடியவரும், பாரத வெண்பா பாடியவரும் வெவ்வேறு காலத்தில் இருந்த வெவ்வேறு பெருந்தேவனார்கள் என்பதை மட்டும் அழுத்தமாகக் கூறுகிறோம்.

நந்திக்கலம்பகம்

தெள்ளாறெறிந்த நந்திவர்மன் மேல் பாடப்பட்ட நூல் நந்திக்கலம்பகம். கலம்பகம் என்பது, சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்தில் உண்டான பிரபந்த நூல்களில் ஒன்று; பலவகையான பாக்களினாலே அகப்பொருள் துறைகள் அமையப் பாடப்படுவது. அந்தாதித் தொடையாக வந்து, இறுதிச் செய்யுளின் கடைசிச் சொல்லும் முதற்பாட்டின் முதற் சொல்லும் ஒன்றாக அமைந்து மண்டலமாக முடிய வேண்டும். இந்த முறைப்படி நந்திக் கலம்பகம் அமைந்திருக்கிறது. ஆனால், 78-ஆம் பாட்டுக்கும் 79-ஆம் பாட்டுக்கும் அந்தாதித்தொடை அமையவில்லை. இதனால், இச்செய்யுள்களுக் கிடையே ஒன்று அல்லது பல செய்யுள்கள் இருந்து மறைந்துவிட்டன என்று தோன்றுகிறது.

அரசர்மீது பாடப்படுகிற கலம்பகம் தொண்ணூறு செய்யுள் களைக் கொண்டிருக்கவேண்டும் என்பது பிற்காலத்து இலக்கணச் சட்டம். இதன்படி நந்திக் கலம்பகம் தொண்ணூறு செய்யுளைக் கொண் டிருந்ததா என்பது தெரியவில்லை. இப்போது இந்நூலில் காணப்படுகிற செய்யுட்கள் எண்பத்தெட்டுதான். மேலே கூறியபடி, ஓரிடத்தில் அந்தாதித் தொடையற்றிருக்கிறபடியால், சில செய்யுள்கள் பிற்காலத் தில் மறைந்திருக்க வேண்டும். சில பிரதிகளில், இருபத்திரண்டு செய்யுட்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. எழுபத்தாறாம் செய்யுளின் பின்னிரண்டடிகள் மறைந்துவிட்டன. நான்கு பாயிரச் செய்யுட்கள் உள்ளன. எனவே, நந்திக் கலம்பகம் ஆதியில் எத்தனைச் செய்யுள்களைக் கொண்டிருந்தது என்பது இப்போது தெரியவில்லை.