உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

மதுரை, சங்கம் என்னும் இரண்டு சொற்களின் ஒற்றுமையை மட்டும் வைத்துக்கொண்டு, பாண்டியரின் தமிழ்ச் சங்கத்தையும் வச்சிர நந்தியின் திராவிட சங்கத்தையும் ஒன்றாக இணைத்துப் பொருந்திக் கூறுவதும், வச்சிரநந்தியின் சங்கத்தில் தொல்காப்பியனார் தமது தொல்காப்பிய இலக்கண நூலை இயற்றி வெளிப்படுத்தினார் என்றும், ஆகவே அவர் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தவர் என்றும் கற்பித்துக் கூறுவதும் ஆகிய எல்லாம் மாறுபடக் கூறல் மயங்கக் கூறல் திரித்துக் கூறல் ஆகும் என்று அறிதல் வேண்டும். இதில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது ஒன்று உண்டு. அது என்னவென்றால், வச்சிர நந்தி திராவிட சங்கத்தை ஏற்படுத்தியது கி.பி. 470-ல் ஆகும். அந்தக் காலத்தில் பாண்டி நாட்டைக் காப்பிர அரசர் ஆண்டனர். பாண்டியர் ஏற்படுத்திய தமிழ்ச் சங்கம் கி.பி. 300-க்கு முன்பு மறைந்துபோயிற்று என்பதை ஆராய்ச்சிக்காரர் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

பொருத்தமற்றதைப் பொருத்திக் கூறுவதும், திரித்துக் கூறுவதும் உண்மையாராய்ச்சியாகாது. நுனிப் புல்லை மேய்வதுபோல மேற் போக்காகப் பாராமல், ஆழ்ந்து சிந்தித்து உண்மை காண்பதே ஆராய்ச்சியாகும். நடுநின்று உண்மையைக் காண்பதே செம்மையான ஆராய்ச்சியாகும். மேற்பார்வைக்கு மெய்போலத் தோன்றுகிற பொய்மொழிகள் உண்மையாராய்ச்சியாகா.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.