உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

105

சைவரின் பெரியபுராணத்தில் (திருத்தொண்டர் புராணத்தில்) 63 அடியார்களின் சரித்திரம் கூறப்படவில்லை. எழுபத்திருவர் சரித்திரங்கள் கூறப்படுகின்றன. ஆனால், தொகையடியாரைக் கழித்து 63 அடியார்கள் என்று கூறுகிறார்கள். எழுபத்திரண்டை ஏன் 63 ஆகக் குறைக்க வேண்டும்? சமணரது 63 அடியாருக்குச் சமானமாகக் கணக்கிடுவதற்குத்தானே? சென்னை மயிலாப்பூர் போன்ற சில சிவன் கோயில்களில் இப்போதும் அறுபத்து மூவர் உற்சவம் வெகு சிறப்பாக

ண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அன்றியும் கன்னட மொழியிலே சைவ அடியார்களின் சரிதம், தமிழ்த் திருத்தொண்டர் புராணம் போலவே எழுதப்பட்டிருக்கின்றது. அவற்றிற்கும் அறுபத்து மூன்று பெரியார் சரிதம் என்று பெயர் சூட்டியுள்ளனர். அஃதாவது, அருவத்துமூவர் புராதன சரிதெ என்றும், அருவத்து மூரு புராதன சரணர சரிதெ என்றும் பெயர் சூட்டியுள்ளனர். இதனால், சமணரைப் போலவே சைவரும் தம் அடியார் தொகையை அறுபத்து மூவர் என்று ஆக்கிக்கொண்டது தெரிகிறது.

சமணர் தம் திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரத்தை ஸ்ரீ புராணம் என்றும் வழங்குவர். ஸ்ரீ புராணம் என்னும் பெயரையுடைய மணிப் பிரவாள நடைநூல் ஒன்றும் சமணருக்கு உண்டு. இந்த ஸ்ரீ புராணத்தில் சமணருடைய 63 பெரியாருடைய சரிதங்கள் கூறப் படுகின்றன. சமணர் தம் திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரத்தை ஸ்ரீபுராணம் என்று வழங்கிவருவது போலவே, சைவர்களுக்கு தமது பெரிய புராணமாகிய திருத்தொண்டர் புராணத்தை ஸ்ரீபுராணம் என்று பண்டைக்காலத்தில் வழங்கி வந்தனர். ஆனால், இந்த வழக்கு இக்காலத்தில் வழங்கப்படுவதில்லை.

தொண்டை நாட்டில், திருவொற்றியூரில் உள்ள ஆதிபுரீஸ் வரர் கோயில் கல்வெட்டுச் சாசனம் இவ்வாறு கூறுகிறது. "திருப்பங்குனி யுத்திரத்து ஆறாந்திருநாளான புதன்கிழமையும் ஏகாதசியும் பெற்ற ஆயிலைத்தினன்று படம்பக்கநாயக தேவர் திருமகிழின் கீழ் திருவோலக்கஞ் செய்தெழுந்தருளியிருந்து ஆளுடைய நம்பி ஸ்ரீபுராணம் கேட்டருளி.”9

இந்தச் சாசனம் கோவிராச கேசரிபன்மரான சக்கர வர்த்திகள் ஸ்ரீ இராசாதிராச தேவரது 9ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இவர் கி.பி. 1172 முதல் 1186 வரையில் அரசாண்ட இராசாதிராசர் 11 ஆவர்.