உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

187

உறையூரை அரசாண்ட கோப்பெருஞ்சோழன், தன் மக்கள் அரசுரிமைக்காகக் கலகஞ்செய்ததைக் கண்டு சினங்கொண்டு அவர்கள் மேல் போர் செய்யச் சென்றான். அப்போது, புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர், அறிவில்லாத மக்கள் மேல் தந்தை போர் செய்வது தவறு என்று கூறித் தடுத்து விட்டார். ஆனால் சோழன் தன் மக்களின் செயலுக்காக வருந்தி வடக்கிருந்து (உண்ணாவிரதம் இருந்து) உயிர்விட்டான். சோழனுடைய நண்பர் பிசிர் ஆந்தையார் என்னும் புலவர் தம் நண்பராகிய சோழன் உயிர்விடுவதைக் கண்டு மனம் பொறாமல் தாமும் அவர் பக்கத்தில் அமர்ந்து வடக்கிருந்து உயிர் விட்டார். சோழனுடைய மற்றொரு நண்பரான பொத்தியார் என்பவரும் அச்செய்தி யறிந்து மனம் வருந்தித் தாமும் வடக்கிருந்து உயிர்விட்டார் இச்செய்திகளைப் புறநானூறு 212முதல் 223 வரையில் உள்ள செய்யுள்களால் அறியலாம்.

சிறுபஞ்சமூலம் என்னும் நூலிலேயும் வடக்கிருத்தல் கூறப்

படுகிறது.

வலியழிந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயின்

நலிபழிந்தார் நாட்டறைபோய் நைந்தார்-மெலிவொழிய இன்னவரால் என்னாராய் ஈந்த ஒருதுற்று

மன்னவராச் செய்யும் மதித்து.

இச்செய்யுள், இன்னின்னாருக்கு உணவு கொடுத்தவர் மறு பிறப்பில் மன்னராகப் பிறப்பார்கள் என்று கூறுகிறது. இதில் வடக் கிருத்தல் கூறப்படுவது காண்க. பழைய உரைக்குறிப்பு, "வடக்கிருந்தார் பழிபட்டு உண்ணாது வடக்கிருந்தார்” என்று கூறுகிறது.

சங்கப் புலவராகிய கபிலர் என்பவரும் தமது நண்பராகிய பாரிவள்ளல் இறந்த பிறகு பட்டினி கிடந்து (வடக்கிருந்து) உயிர் விட்டார் என்று அறிகிறோம்.

இதனால் சங்ககாலத்திலே சல்லேகனை என்னும் வடக்கிருத்தல் சமணர்களிடத்தில் மட்டும் அல்லாமல் மற்றவர் இடத்திலும் பரவி யிருந்ததை அறிகிறோம். இதனால் கடைச்சங்க காலத்திலேயே சமணர் செல்வாக்குச் சிறந்திருந்தது என்பது அறியப்படுகிறது.

அடிக்குறிப்புகள்

1. மொக்கலவாதச் சருக்கம். 55ஆம் செய்யுள்.