உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

19

கண்டேன். சமணசமயத்தவர் செய்துள்ள தொண்டுபோல அவ்வளவு அதிகமான தொண்டுகளை வேறு சமயத்தவர் தமிழ் மொழிக்குச் செய்யவில்லை என்பதையும் அறிந்தேன். ஆகவே, பண்டைத் தமிழரின் சமயவாழ்க்கையில் பெரும் பங்கு கொண்டிருந்து, தமிழ் மொழியை வளப்படுத்திய சமணசமய வரலாற்றை எழுதவேண்டு மென்னும் அவாவினால் உந்தப்பட்டு இந் நூலை எழுதினேன். இதனை எழுதும்போது அவ்வப்போது என்னை ஊக்கப்படுத்தித் தூண்டியவர் அண்மையில் காலஞ் சென்ற தமிழ்ப் பேராசிரியர் திரு. ச.த. சற்குணர், B.A., அவர்கள் ஆவர். அப் பெரியாரின் ஆன்மா சாந்தியுறுவதாக.

வரலாறுகளை ஆராய்ந்து எழுதுவது, கதைகளை எழுதுவது போல, எளிதான காரியமன்று. ஒவ்வொன்றையும் துருவித் துருவிப் பார்த்துச் சான்று காட்டி ஆதாரத்தோடு எழுதவேண்டும். அன்றியும், எனது மதம் பிறர் மதம் என்று கொள்ளாமல், காய்தல் உவத்தல் இல்லாமல், நடுநின்று செம்பொருள் காணவேண்டும். சாசனங்களையும், பல நூல்களையும், ஏனைய சான்றுகளையும் ஆராய்ந்து ஒத்திட்டுப்பார்த்து முடிவு காணவேண்டும். (இந்த மனப்பான்மை நூலை வாசிப்பவர்களுக்கும் இருக்க வேண்டும்.) வாழ்க்கைப் பேராட்டத்தின் இடையே கிடைத்த சிறு சிறு நேரங்களைப் பயன்படுத்திக்கொண்டு, என்னால் இயன்ற வரையில் எனது சிற்றறிவுக்கெட்டியவரையில் ஏறக்குறைய நான்கு ஆண்டுக்குள் இதனைப் எழுதி முடித்தேன். ஆயினும் முதலில் சொல்லியபடி, ‘ஊழ்’ இதனை பத்து ஆண்டுகளாக வெளிவராமல் செய்து விட்டது. நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டு இந்த நூலை எழுதி ஏன் என் ஆயுளை வீணாக்கினேன் என்று கருதி இதை வெளியிடாமலே இருந்துவிட்டேன். அதற்குச் சில காரணங்கள் உண்டு. அவற்றை இங்குக் கூற விரும்பவில்லை. ஒன்றைமட்டும் கூற விரும்புகிறேன்; உண்மையாக உழைத்து ஆராய்ச்சி நூல் எழுதும் உழைப்பாளிகளுக்குத் தமிழ்நாட்டிலே இடமில்லை என்பதே அது. பாமரர்களைப் பற்றியும் படியாத பணக்காரர்களைப்பற்றியும் கூறவில்லை நான். “கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்.” கல்வித்துறையிலே மிகவுயர்ந்தநிலை பெற்று ஆராய்ச்சியின் அருமை பெருமைகளை அறிந்தவர்கள்கூட, ஆராய்ச்சியாளரைப் போற்றுவதில்லையென்றால், இந் நூல்களை ஏன் எழுதவேண்டும், ஏன் வெளிப்படுத்த வேண்டும்?