உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

வைதீக மதத்தார் சைவ சமயத்தை எதிர்த்த செய்தியைச் சண்டேசுர நாயனார் புராணத்திலிருந்து நன்றாக அறியலாம்.

திருச்சேய்ஞலூர் கிராமத்தில், அக்காலத்தில் வைதீகப் பிராமணர் சிலர் வாழ்ந்து வந்தனர். அவர்களில் எச்சதத்தன் (யாகம் செய்யும் வைதீகப் பிராமணன்) ஒருவன். அவனும் அவ்வூர்ப் பிராமணரும் சிவ லிங்க வழிபாட்டை எதிர்த்தார்கள். ஆனால், எச்சதத்தனுடைய மகன் சிவலிங்க வழிபாடு செய்து கொண்டு சைவனாக மாறினான். அதைக் கண்டு பொறாமல் வைதீகப் பார்ப்பனர் தந்தையாகிய எச்சதத்தனுக்குத் தெரிவித்து அவனைக் கண்டித்தார்கள். எச்சதத்தன், தன் மகன் சிவலிங்க பூசை செய்யும் போது அங்குச் சென்று காலினால் இடறிச் சிதைத்தான். அவன் மகன் கோபங் கொண்டு அவன் காலைக் கோடாரியால் வெட்டினான். கடைசியில் சிவபெருமான் தோன்றித் தன் பக்தனுக்கு அருள் செய்தார். இந்த வரலாற்றிலிருந்து அக்காலத்தில் வைதீகப் பார்ப்பனர் சைவ சமயத்தை வன்மையாகக் கண்டித்தனர் என்பது தெரிகின்றது.

ஆனால் வைதீக சமயப் பார்ப்பனர் தங்களுடைய இக்கட்டான நிலைமையை விரைவில் உணர்ந்து கொண்டார்கள். தங்கள் சொந்த வைதீக மதத்தைப் பரப்புவதற்கு வழியில்லாமலும் அதே சமயத்தில் ஜைன பௌத்த மதங்களின் பகைமையை வளர்த்துக் கொண்டு அம் மதங்களின் பிரசாரத்தினால் தாக்குண்டு செல்வாக்கு இல்லாமலும் இருந்து கொண்டு, மேலும் சைவ சமயத்துடன் விரோதம் பாராட்டிக் கொண் டிருந்தால் தாங்கள் வாழ முடியாது என்னும் உண்மையை வைதீகப் பார்ப்பனர் உணர்ந்து கொண்டார்கள். ஆகவே, அவர்களுக்குச் சைவ சமயத்துடன் ஒன்றுபட்டு வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பௌத்த சமண சமயங்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வைதீகப் பிராமணர், தாங்கள் முன்பு பகைமை பாராட்டிய சைவ சமயத்தவரோடு சேர்ந்துகொண்டு, தங்களுக்குப் பக்க பலத்தைத் தேடிக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆகவே, அவர்கள், தங்களைவிடப் பல மடங்கு பலமுடைய சைவ சமயத்துடன் கலந்து இசைந்து போக வேண்டியவர்கள் ஆனார்கள். அதனால் திராவிட ஆரிய சமயத் தொடர்பு ஏற்பட்டது. வைதீகப் பிராமணர் தங்களுடைய வைதீக சமயத் தெய்வங்களைத் தமிழர்களின் (திராவிடரின்) கடவுளர்களோடு இணைத்துத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்கள். அதற்கு ஏற்பப் புராணக் கதைகளைக் கட்டிக் கொண்டார்கள்.