உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

25

இவ்வாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தவ ராகத் கூறப்படுகிற முதல் இருபத்திரண்டு தீர்த்தங்கரர்களைக் கற்பனைப் பெரியார் என்று ஒதுக்கிவிட்டு முறையே 100 ஆண்டும் 72 ஆண்டும் உயிர் வாழ்ந்தவராகக் கூறப்படுகிற கடைசி இரண்டு தீர்த்தங்கரராகிய பார்சுவநாதரையும், மகாவீரரையும் உலகத்தில் உயிர் வாழ்ந்திருந்த உண்மைப் பெரியார் என்றும் கொண்டு, இவர்கள் காலத்தில் தான் சமணமதம் தோன்றியிருக்க வேண்டும் என்று வரலாற்றாசிரியர் கருதுகிறார்கள்.

ஆராய்ந்து பார்த்தால் தீர்த்தங்கரர் அனைவரும் உண்மையில் உயிர் வாழ்ந்திருந்த பெரியார் என்பதும் கற்பனைப் பெரியார் அல்லர் என்பதும் புலப்படும். பண்டைக் காலத்திலிருந்த சமயப் பெரியார்களைப் பற்றிப் பிற்காலத்தவர், மக்கள் இயற்கைக்கு மேற்பட்ட இயல்புகளைக் கற்பித்துக் கதை எழுதுவது வழக்கம். இது எல்லா மதங்களுக்கும் இயல்பு. தம்முடைய மதப் பெரியார்களின் பெருமை, ஆற்றல், சிறப்பு, தெய்வீகத் தன்மை முதலியவற்றை அதிகப்படுத்த வேண்டும் என்னும் சமய ஆர்வத்தினால் ஒவ்வொரு சமயத்தாரும் தத்தம் சமயப் பெரியாரைப் பற்றிப் பலவித செய்திகளைக் கற்பித்து விடுகிறார்கள். இயற்கைக்கு மாறுபட்ட இக் கற்பனைகளைச் சமயப்பற்று என ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், அவர்கள் உண்மையில் உலகத்தில் வாழ்ந்திருந்தவர் என்பது புலனாகும். அது போன்று தீர்த்தங்கரரின் மிகப் பெரிய உருவத்தையும் நீண்ட வாழ்க்கையையும் சமணரின் 'சமயக் கொள்கை' என்று ஒதுக்கி விடுவோமாயின், தீர்த்தங்கரர் அனைவரும் உண்மைப் பெரியார் என்பது புலப்படும்.

சமணர்கள் தமது தீர்த்தங்கரருக்கு ஏன் பருத்த உயர்ந்த உடலையும் நீண்ட ஆயுளையும் கற்பித்தார்கள்?

உயிர் உடம்பு முழுவதும் பரவி நிற்கிறது என்பதும், உடம்பின் உருவத்திற்கு ஏற்றபடி உயிரானது சிறிதும் பெரிதுமாக அமையும் என்பதும் சமண சமயக் கொள்கை. எறும்பின் மிகச்சிறிய உடலில் பரந்து நிற்கும் உயிர் அதன் உடலுக்குத் தக்கபடி சிறியதாகவும், மிகப் பெரிய யானையின் உடம்பில் பரந்து நிற்கும் உயிர் அதன் பெரிய உடம்புக்குத் தக்கபடி மிகப் பெரியனவாகவும் அமைந்து நிற்கும் என்பது ஆருகத மதக் கொள்கை. இக்கருத்துப் பற்றியே "பெரியதன் ஆவி பெரிது” என்னும் பழமொழியும் சமணரால் வழங்கப்படுவதாயிற்று. என்னை?