உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

101

வகைத் தமிழ் எழுத்து உண்டாக்கப்பட்டு இப்போது வழங்கப்படுகிற தமிழ் எழுத்து வழங்கப்பட்டது. இந்தத் தமிழ் எழுத்துக்கும் கிரந்த எழுத்து என்பது பெயர். ஆனால், பாண்டிய நாட்டிலும், பிராமி எழுத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பழைய வட்டெழுத்தே வழக்கத்தில் இருந்து வந்தது.

கி.பி. 9ஆம் நூற்றாண்டிலே சோழநாட்டிலே, கிரந்தத் தமிழ் எழுத்து எல்லோராலும் பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும். கி.பி. 10ஆம் நூற்றாண்டில் சோழர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய போது, அந்நாட்டில் வழங்கிவந்த வட்டெழுத்துக்களை மாற்றிப் புதிய கிரந்தத் தமிழ் எழுத்துக்களைப் புகுத்தினார்கள். ராசகேசரிவர்மன் என்னும் சிறப்புப் பெயரையுடைய ராசராசனும் (முதல் ராஜராஜன்) அவன் மகன் ராசேந்திரனும் (முதல் ராசேந்திரன்) பாண்டி நாட்டிலே கிரந்தத் தமிழ் எழுத்தை (இப்போது வழங்கப்படும் தமிழ் எழுத்தை)ப் புதிதாகப் புகுத்தினார்கள் என்று ஆராய்ச்சிவல்லார் கூறுவர். இந்தச் சோழ அரசர்கள் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் கிரந்தத் தமிழ் எழுத்தைப் பாண்டிநாட்டில் புகுத்தியதற்குச் சான்று என்னவென்றால், குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோயில் சாசனங் களாகும். இச்சாசனங்கள், பழைய வட்டெழுத்தில் எழுதப் பட்டிருந்த சாசனங்களைப் புதிய எழுத்தில் பெயர்த்தெழுதி ராசராசன் அமைத்தான் என்று கூறுகின்றன.

இவ்வாறு பௌத்தர்களால் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்ட பிராமி எழுத்துச் சில நூற்றாண்டுகள் வழங்கிவந்து, பின்னர் அதிலிருந்து வட்டெழுத்து உண்டாகி சில நூற்றாண்டு வழங்கி வந்து, பின்னர், பிராமி எழுத்திலிருந்தே பௌத்த ஜைனர்களால் இன்னொரு வகையாக உண்டாக்கப்பட்ட கிரந்த எழுத்துக் களிலிருந்து கிரந்தத் தமிழ் எழுத்து உண்டாகி அவ்வெழுத்தே நாளிதுவரை வழங்கப்பட்டு வருகிறது. அசோகர் எழுத்து எனப் படும் பிராமி எழுத்திலிருந்தே நாகரி எழுத்து உண்டாகி இப்போது வடநாட்டில் வழங்கி வருகிறது. சுருங்கக் கூறினால், பிராமி எழுத்திலிருந்தே நாகரி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய எழுத்துக்கள் உண்டாயின. இதில் சற்றும் ஐயமில்லை. அறிஞர் ஆராய்ந்து கண்டுகொள்க.