உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

115

அவ்வாறே 'சீத்தலை' மதுரைக் கூலவாணிகர்' என்னும் அடை மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

செந்தமிழ்ப் புலமை வாய்ந்த இவர் வாணிக முயற்சியை மேற் கொண்டிருந்தார். எனவே, புலவர் என்கிற முறையிலும், வணிகர் என்கிற முறையிலும் இவர் பல நாடுகளைச் சுற்றிப் பார்த்த வராதல் வேண்டும். எங்ஙனமெனில், அக்காலத்து வழக்கப்படி, தமிழ்நாட்டுப் புலவர்கள் வறியராயினும் செல்வராயினும் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று, அவ்வற் நாட்டிலுள்ள அறிஞரோடு கலந்து உறவாடுவது வழக்கம். வியாபாரிகளும் வாணிக சம்பந்தமாக அயல்நாடுகளுக்குச் சரக்குக் கொள்ளவும் விற்கவும் போவது இயற்கை. அன்றியும், பொதுவாக வாணிகர்களுக்குத்தான் பொதுப்படையான பல செய்திகள் அறிய முடியும். இவர் பல நாடுகளுக்குச் சென்றவர் என்பது இவர் இயற்றிய மணிமேகலையில் புகார், மதுரை, வஞ்சி, காஞ்சிபுரம் முதலிய ஊர்களைப் பற்றிக் கூறியிருக்கும் முறையினின்று நன்கு தெரிய வருகின்றது. சேரநாட்டினை அரசாண்டிருந்த செங்குட்டுவனுக்கும், அவன் தம்பியாராகிய இளங்கோவடிகளுக்கும் இவர் உற்ற நண்பர். இவர் காலத்தில்தான் கோவலன் பாண்டி நாட்டில் கொலையுண்டான். கோவலன், கண்ணகி இவர்களின் செய்தியை இவர் செங்குட்டுவனுக்கும் இளங்கோவடிகளுக்கும் சொல்ல, அதைக் கேட்ட செங்குட்டுவன் கண்ணகியின் கற்பினைப் பாராட்டி, அவளுக்குக் கோயில் அமைத்தான்; இளங்கோ அடிகள் அவ்வரலாற்றினைச் சிலப்பதிகாரம் என்னும் காப்பியமாக இயற்றி, இவர் முன்னிலையில் அரங்கேற்றினார். சிலப்பதி காரத்தின் தொடர்ச்சியாகிய 'மணிமேகலை' என்னும் காப்பியத்தை இவர் இயற்றி, இளங்கோ அடிகள் முன்னர் அரங்கேற்றினார்.

மணிமேகலையை இயற்றியதுமன்றி, வேறு சில செய்யுள்களையும் இவர் இயற்றியிருக்கின்றார். அவை சங்கநூல்களுள் தொகுக்கப் பட்டுள்ளன. நற்றிணையில் மூன்று, குறுந்தொகையில் ஒன்று, புறநானூற்றில் ஒன்று, அகநானூற்றில் ஐந்து.

சங்க நூல்களில் தொகுக்கப்பட்டுள்ள மேற்கண்ட செய்யுள்களின் நடையிலும், மணிமேகலையின் நடையிலும் வேறுபாடு காணப்படுவது கொண்டு இவ்விருவகைச் செய்யுளையும் இயற்றியவர் ஒருவர்தாமோ என்று சிலர் ஐயுறுவர். ஆனால் ஒரே புலவர், தாம் மேற்கொண்ட நோக்கத்தை நிறைவேற்ற வெவ்வேறு நடையில் செய்யுள் செய்யக்