உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

117

என்னும் நோக்கத்தோடு, அப் பிக்ஷுக்களைத் தமிழ்நாட்டிற்குத் துரத்தி விட்டான். நாடு கடத்தப்பட்ட பிக்ஷுக்கள் சோழ நாட்டிற்கு வந்தார்கள்.

இவர்கள் நாடு கடத்தப்பட்டுச் சோழநாட்டுக்கு வந்த காரணத்தை யறிந்த சங்கமித்திரர், தாமும் வைதுல்ய (மகாயான) பௌத்த மதத்தைச் சேர்ந்தவராதலின், தமது மதத்தை இலங்கையில் நாட்டவேண்டும் என்னும் உறுதிகொண்டு இலங்கைக்குச் சென்றார். சென்று வைதுல்ய மதத்தைப் போதித்தார். இதையறிந்த ஈனயான பௌத்த பிக்ஷுக்கள் அரசனிடத்தில் முறையிட்டார்கள். அரசன் சங்கமித்திரயையும் ஈனயான பிக்ஷக்களின் தலைவரான சங்கபாலர் என்பவரையும் அழைத்துத் தனது முன்னிலையில் வாது செய்க என்றும், யார் வாதில் வெற்றி பெறுகிறாரோ அவரது மதந்தான் சிறந்தது என்றும் கூறினான். இருவருக்கும் அரசன் அவைக்களத்தில் வாதப்போர் நிகழ்ந்தது. வாதத்தில் தமிழரான சங்கமித்திரரே வெற்றி பெற்றார். இலங்கை வேந்தன் சங்கமித்திரரின் ஆழ்ந்த கல்வியறிவைப் பாராட்டி இவரை ஆதரித்தான். ஆதரித்ததுமட்டும் அன்றித் தமது பிள்ளைகளான ஜேட்டதிஸ்ஸன், மகாசேனன் என்னும் இருவருக்கும் கல்வி கற்பிக்க இவரை ஆசிரியராக நியமித்தான். சங்கமித்திரர், இவ்விருவரில் இளையவனான மகாசேனனிடத்தில் அதிக அன்பு பாராட் டினபடியால், மூத்தவனான ஜேட்ட திஸ்ஸன் இவரிடம் பகைமை பாராட்டி வந்தான். இவர், அரசனிடம் பெற்றிருந்த செல்வாக்கைக் கொண்டு வைதுல்ய மதத்தை இலங்கையில் பரப்ப முயற்சி செய்தார்.

இவ்வாறிருக்க, மேகவர்ணாபயன் காலஞ்சென்றான். அர சுரிமையை மூத்த மகனான ஜேட்டதிஸ்ஸன் (கி.பி. 323-33), ஏற்று, அரசு கட்டில் ஏறினான். ஏறியவுடன் மந்திரிகளில் சிலரைக் கொலை செய்துவிட்டான். இதைக்கண்ட சங்கமித்திரர் தம் மாணவனான இவன் ஏற்கெனவே தம்மிடம் பகைமை பாராட்டி வந்தவனாதலின், தம்மையும் கொன்று விடுவானோ என்று அஞ்சிச் சோழநாட்டிற்கு வந்துவிட்டார். பிறகு பத்து ஆண்டு வரையில் இலங்கை செல்லவே இல்லை. பத்து ஆண்டு கழிந்த பின்னர், ஜேட்ட திஸ்ஸன் இறந்துவிட்டான். அப்போது அரசுரிமையை இவரின் அன்புக்குரிய மாணவனான மகாசேனன் (கி.பி. 334 - 361) மேற்கொண்டான். இச்செய்தி அறிந்த சங்கமித்திரர் இலங்கைக்குச் சென்று, தம் மாணவனாகிய அரசனுக்குத் தமது கையினாலேயே முடிசூட்டினார். அது முதல் இலங்கையில் தங்கி மீண்டும் தமது வைதுல்ய மதத்தைப் பரப்ப முயற்சி செய்தார்.