உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

131

மதபோதகராக இருந்தார். இவர் கி.பி. 661 இல் பிறந்தார். வட இந்தியாவில் இருந்த பேர் பெற்ற நளாந்தைப் பல்கலைக் கழகத்தில் 26 வயது வரையில் கல்வி பயின்றார். பின்னர், 689இல் கபிலவாஸ்து என்னும் நகரம் வரையில் யாத்திரை செய்தார். பின்னர், மீண்டும் தமிழ் நாட்டிற்கு வந்தார். அக்காலத்தில் தொண்டை மண்டலத்தில் வற்கடம் உண்டாகி மக்கள் வருந்தினர். அந்த நாட்டினை அரசாண்ட நரசிம்ம போத்தவர்மன் என்னும் அரசன் வச்சிரபோதியின் மகிமையைக் கேள்விப்பட்டு, இவரையணுகி, நாட்டுக்கு நேரிட்டுள்ள வருத்தத்தைப் போக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ள, இவர் தெய்வத்தைப் போற்றி வேண்ட, மழை பெய்து நாடு செழிப்படைந்தது என்று இவரது வரலாறு கூறுகின்றது.

இவர் தந்திரயான பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். தந்திர யான மதத்துக்கு 'வச்சிரயானம்', 'மந்திரயானம்' என்னும் பெயர்களும் உண்டு. இவரது மாணவர் அமோகவச்சிரர் என்பவர். இவர் இலங்கைக்குச் சென்று அங்கிருந்த அபயகிரி விகாரையில் ஆறு திங்கள் தங்கிருந்தார். பின்னர், மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்து சில நாள் தங்கியியிருந்தார். பின்னர், தமது தந்திரயான பௌத்த மதத்தைச் சீன தேசத்தில் பரவச் செய்ய எண்ணங்கொண்டு சீனதேசம் செல்ல விரும்பினார். இவர் எண்ணத்தை அறிந்த காஞ்சி அரசன், கடல் யாத்திரையின் துன்பங்களை எடுத்துரைத்துப் போகவேண்டா என்று தடுத்தான். இவர் பிடிவாதமாக இருந்தபடியால், அரசன் இவரது சீன தேசப் பிரயாணத்துக்கு வேண்டும் உதவிகளைச் செய்து கொடுத்தான். 'மகாப் பிரஜ்ஞ பாரமிதை பாரமிதை' என்னும் பௌத்த நூலின் பிரதி யொன்றினையும் மற்றும் விலையுயர்ந்த பொருள்களையும் சீன அரசனுக்குக் கையுறையாக வழங்க, ஒரு தூதுவனையும் இவருடன் அரசன் அனுப்பினான்.

வச்சிரபோதி தமது மாணவருடன் புறப்பட்டுச் சென்றார். கப்பல் அடுத்த நாள் இலங்கையை யடைந்தது. ஸ்ரீசைலன் என்னும் இலங்கை அரசன், இவரை வரவேற்றுத் தனது அரண்மனையில் ஒரு திங்கள் வரையில் இருக்கச் செய்தான். பின்னர், மரக்கல மேறிச் சீனநாட்டுக்குச் செல்லும் வழியில், சுமாத்ரா தீவில் இருந்த ஸ்ரீவிஜய தேசத்தில் ஐந்து திங்கள் தங்கினார். மீண்டும் புறப்பட்டு, கி.பி. 720இல் சீனதேசம் சேர்ந்தார். ஆங்குத் தமது தந்திரயான பௌத்தக் கொள்கைகளைப்