உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. தமிழில் பாலிமொழிச் சொற்கள்

வாணிகம், மதம், அரசாட்சி முதலிய தொடர்புகளினாலே ஒரு தேசத்தாரோடு இன்னொரு தேசத்தார் கலந்து உறவாடும் போது, அந்தந்தத் தேசத்து மொழிகளில் அயல்நாட்டுச் சொற்கள் கலந்து விடுவது இயற்கை. வழக்காற்றிலுள்ள எல்லா மொழிகளிலும் வெவ்வேறு மொழிச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். இந்த இயற்கைப் படியே தமிழிலும் வெவ்வேறு மொழிச் சொற் கள் சில கலந்து வழங்குகின்றன. இவ்வாறு கலந்து வழங்கும் வேறுமொழிச் சொற்களைத் திசைச் சொற்கள் என்பர் இலக்கண ஆசிரியர்.

தமிழில் போர்ச்சுகீசு, ஆங்கிலம், உருது, அரபி முதலிய அயல் மொழிச் சொற்கள் சில கலந்து விட்டமை போலவே, பாகத (பிராகிருத) மொழிகளில் ஒன்றான பாலி மொழியிலிருந்தும் சில சொற்கள் கலந்து காணப்படுகின்றன. பாலிமொழி இப்போது வழக்காறின்றி இறந்து விட்டது. என்றாலும், பண்டைக் காலத்தில், வட இந்தியாவில் மகதம் முதலான தேசங்களில் அது வழக்காற்றில் இருந்து வந்தது. 'தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்' எனப் போற்றப்படும் கௌதம புத்தர், இந்தப் பாலிமொழியிலேதான் தம் உபதேசங்களை மக்களுக்குப் போதித்து வந்தார் என்பர். பாலி மொழிக்கு மாகதி என்றும் வேறு பெயர் உண்டு. மகத நாட்டில் வழங்கப்பட்டதாகலின், இப்பெயர் பெற்றது போலும்; வைதீக மதத் தாருக்குச் சம்ஸ்கிருதம் ‘தெய்வபாஷை'யாகவும் ஆருகதருக்குச் சூரசேனி என்னும் அர்த்தமாகதி ‘தெய்வ பாஷை யாகவும் இருப்பது போல, பெளத்தர்களுக்கு மாகதி என்னும் பாலிமொழி ‘தெய்வபாஷை'யாக இருந்து வருகின்றது. ஆகவே பண்டைக் காலத்தில் எழுதப்பட்ட பௌத்த நூல்கள் எல்லாம் பாலிமொழியிலே எழுதப்பட்டு வந்தன. பிற்காலத்தில், மகாயான பௌத்தர்கள், பாலிமொழியைத் தள்ளி, சம்ஸ்கிருத மொழியில் தம் சமயநூல்களை இயற்றத் தொடங்கினார்கள். ஆனாலும், தென் இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய இடங்களில் உள்ள பௌத்தர்கள் தொன்று தொட்டு இன்றுவரையில் பாலிமொழியையே தங்கள் ‘தெய்வ மொழி' யாகப் போற்றி வருகின்றார்கள். பௌத்த மதம், தமிழ்நாட்டில் பரவி நிலை பெற்றிருந்த காலத்தில் அந்த மதத்தின் தெய்வபாஷையான பாலிமொழியும் தமிழ்நாட்டில் இடம்பெற்றது.