உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கௌதமபுத்தர் வாழ்க்கை வரலாறு

உலகத்திலே அறம் குன்றி மறம் வளர்ந்து மக்கள் அல்லலுறுங் காலங்களிலெல்லாம் புத்தர்கள் தோன்றி அறவழியைப் புகட்டி மக்களை நல்வழிப்படுத்துகிறார்கள் என்பதும், பற்பல கற்ப காலங்களில் கணக்கற்ற புத்தர்கள் தோன்றி அறநெறியை நாட்டிச் சென்றார்கள் என்பதும், இப்போது நடைபெறுகிற இந்தக் கற்ப காலத்திலே இருபத் தைந்து புத்தர்கள் தோன்றினார்கள் என்பதும், அவர்களுள் கடைசியாக வந்தவர் கௌதமபுத்தர் என்பதும் பௌத்தசமயக் கொள்கைகள். இனி வரப்போகிற புத்தரது பெயர் மயித்ரேய புத்தர் என்பதும், அவர் இப்போது துடிதலோகம் என்னும் தெய்வலோகத்திலே நாததேவர் என்னும் பெயருடன் இருக்கிறார் என்பதும் அந்த மதக் கொள்கைகளாம்.

பல புத்தர்கள் இருந்தார்கள் என்று பௌத்த சமய நூல்கள் கூறினாலும், சரித்திர நூலோர், கௌதமபுத்தரை மட்டும் சரித்திர காலப் புத்தர் என்று கொள்கிறார்கள். கௌதமபுத்தருடைய வரலாறு தனி நூல்களாக எழுதப்பட்டுள்ளன வாகையினாலே, ஈண்டு அவரது வரலாற்றை மிகச் சுருக்கமாகக் கூறுகிறோம்.

சாக்கிய குலத்திலே கௌதம குடும்பத்தைச் சேர்ந்த சுத்தோதனர் என்னும் அரசர் கபிலவத்து என்னும் ஊரை அரசாண்டு வந்தார். கபிலவத்து, இமயமலை அடிவாரத்திலே இப்போதைய நேபாள நாட்டில் இருந்தது. சுத்தோதன அரசருக்கும் அவர் மனைவியராகிய மாயாதேவிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. கி.மு. ஆறாம் நூற்றாண்டிலே, அஃதாவது ஏறக்குறைய கி.மு. 563இல் இந்தக் குழந்தை பிறந்ததாகச் சரித்திர நூலோர் கூறுவர். இக் குழவிக்குச் சித்தார்த்தர் என்று பெயர் சூட்டினார்கள். இக் குழந்தைதான் பிற்காலத்திலே புத்தர்பெருமானாக விளங்கியது.

சித்தார்த்தர் பெரியவனானால் துறவியாய் விடுவார் என்று நிமித்திகர் கூறியதைக் கேட்டு, அரசன் மனம் வருந்தி, அக் குழந்தைக்குத் துறவு பூணும் எண்ணம் தோன்றாமலிருக்கும் பொருட்டு அதனைச் செல்வத்திலும் சுகபோகங்களிலும் திளைத்து வரச்செய்தார். உலக வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றாதபடி இன்ப சுகங்களைக்