உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

191

சம்பாபதி தெய்வம், முந்தை முதல்வி, முதுமூதாட்டி, தொன் மூதாட்டி, முதியாள், அருந்தவமுதியோள் என்றும்; சம்பு, கன்னி, குமரி என்றும் மணிமேகலை நூலில் கூறப்படுகிறது. இத்தெய்வத்தின் கோயில் குச்சரக்குடிகை எனப் பெயர் கொண்டிருந்ததென்றும், இக்கோயில் காவிரிப்பூம்பட்டினத்தில் இடுகாட்டிற்கு அருகில் இருந்ததென்றும் அந்நூல் கூறுகிறது.

99

இத்தெய்வத்தைப் பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. சார்ங்கலன் என்னும் பார்ப்பனச் சிறுவன், தன்னந் தனியனாய்ச் சுடுகாட்டிற்குச் செல்ல, அங்கு ஒரு பேய்மகள் பிணத்தின் தலையொன்றினைக் கையிலேந்திக் கூத்தாடியதைக் கண்டு அஞ்சி நடுங்கினான். அவ்வச்சம் நீங்காமல் அவன், வீட்டிற்குச் சென்று நடந்தவற்றைக் கூறி அச்சத்தினாலே உயிர் விட்டான். அவனுடைய தாய் கோதமை என்பவள், ஆறாத் துயரத்துடன், அவனது உடலைத் தோளில் தூக்கிக் கொண்டு சம்பாபதி கோயிலுக்கு வந்து, அவனை உயிர்ப்பித்துக் கொடுக்கும்படி வேண்டினாள். சம்பாபதி தெய்வம் அவள்முன் தோன்றி, “அவன் விதிவசத்தினால் இறந்தானே யன்றி அவனைப் பேய் கொல்லவில்லை. அவன் ஆயுள் அவ்வளவு தான். இறந்தவரைப் பிழைப்பிக்கும் ஆற்றல் எனக்குக் கிடையாது என்று கூறியது. இதனைக் கேட்ட கோதமை மனம் வருந்தி, “தெய்வங்கள் கேட்ட வரத்தைக் கொடுக்கும் என்று உலகோர் கூறுகிறார்கள். உனக்கு, இறந்தவரைப் பிழைப்பிக்கும் ஆற்றல் இல்லை என்று கூறுவது என்னை?” என்று வினவினாள். அப்போது சம்பாபதி தெய்வம், அவள் முன்பாக, சக்கரவாளங்களிலுள்ள எல்லாத் தெய்வங்களையும் தனது தெய்வ ஆற்றலினால் வரவழைத்து, “இவர்களில் யாரேனும் இறந்தவரைப் பிழைக்கும் ஆற்றல் உடையவராயிருந்தால், நானும் உன் மகனை உயிர்ப்பித்துக் கொடுப்பேன்” என்று கோதமைக்குக் கூறியது. வந்த தெய்வங்கள் எல்லாம் ‘தமக்கு அத்தகைய ஆற்றல் இல்லை’ என்று கூறின. அதனால் மனம் தெளிந்த கோதமை, தன் இறந்த மகனது உடலைச் சுடலையில் அடக்கம்செய்து சென்றாள். இக்கதை மணிமேகலை (6ஆம் காதை)யில் கூறப்பட்டுள்ளது.

சாயாவனம் என்னும் ஊரில் உள்ள சிவன் கோயிலின் தென் பக்கத்தில் சம்பாபதி கோயில் ஒன்று இப்போதும் இருக்கிற தென்றும், இக்கோயில் சம்பாபதியம்மன் கோயில் என்றும், பிடாரி கோயில் என்றும் வழங்கப்படுகிறதென்றும் கூறுவர் டாக்டர் சுவாமிநாத ஐயர் அவர்கள். (மணி. அரும்பத அகராதி)