உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8

சில மேல்நாட்டு அறிஞரும் நம்பி இடர்ப்பட்டனர். நேர்மையான பாடம் ‘குச்சரக்குடிகை’யா அல்லது 'குஞ்சக் குண்டிகை'யா என்பதை முடிவுகட்டிய பின்னரே இந்த ஆராய்ச்சியில் இறங்கவேண்டும். இந்த ஐயப்பாட்டைத் தீர்க்காமல், 'கூர்ச்சரத் தேசத்துப் பணியமைந்த சிறிய கோயில்' என்னும் உரையை ஒப்புக்கொண்டு முடிவுகட்டுவது, வழுக்கு நிலத்தில் ஊன்று கோலின்றி நடப்பது போலாகும்.

இனி, ‘குச்சரக்குடிகை' என்னும் பாடந்தான் சரியான தென்று ஒப்புக் கொள்வதாயிருந்தாலும், இச்சொற்றொடர்க்கு உரையாசிரியர் காட்டிய பொருள் தவறு என்றும், இதற்கு வேறு பொருள் இருக்க வேண்டும் என்றும் தோன்றுகின்றது. கூர்ச்சரர் கட்டிடத் தொழிலில் பேர்பெற்றவர் அல்லர் என்பதை நிலை நாட்டி, இந்த உரையை மறுத்து, டாக்டர் S. கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் தாம் எழுதிய Manimekhalai in its Historical Setting என்னும் நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்கள். விரிவஞ்சி அதனை ஈண்டுக் குறிக்காமல் விடுகின்றோம்.

குடிகை' என்பதற்குச் 'சிறிய கோயில்' என்று எழுதப் பட்டுள்ள உரையும் சரியானதாகக் தோன்றவில்லை. குடிகை' என்பதற்கு ஓலையால் வேய்ந்த குடிசை என்பதே பொருள் எனத் தோன்றுகின்றது. இந்தப் பொருளிலேயே இந்தக் குடிகை' என் னும் சொல் மணிமேகலையில் வேறு இடத்திலும் வந்துள்ளது.

66

'தண்டு மண்டையும் பிடித்துக் காவலர்

உண்டுகண் படுக்கும் உறையுட் குடிகையும்

(6ஆம் காதை, 62-63)

நகரத்தை இரவு முழுதும் காவல் காத்த காவலாளர் காலையில் ஊண் உண்டுபடுத்து உறங்கும் குடிசையை (ஓலையால் வேய்ந்த குடிசையை) இது குறிப்பிடுகின்றது. இதற்குக் குறிப்புரை எழுதியவர், “குடிகை- பர்ணசாலை. ‘குடிகா’ என்னும் வடமொழிச் சிதைவென்பர். இஃது இக் காலத்து ‘குடிசை' என்று வழங்குகின்றது” என்று எழுதியிருக்கின்றார். இந்த உரை மிகவும் பொருத்தமானதே. ஆனால், ‘குச்சரக் குடிகை' என்பதற்குப் பொருள் எழுதியபோது, சிறிய கோயில், அஃதாவது, கட்டடத்தால் அமைந்த சிறிய கோயில் என்னும் பொருள்பட எழுதியுள்ளார். ஓரிடத்தில் 'குடிசை’ என்றும், இன்னோரிடத்தில் 'கட்டிடம்' என்றும் எழுதியிருக்கின்றார். இஃது எவ்வாறு பொருந்தும்?