உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

பௌத்த சமண சமயங்கள் மறைந்து போன பிறகும் பள்ளிக்கூடம் என்னும் பெயர் மட்டும் மறையாமல் இன்றும் பௌத்த-சமண சமயத்தவரை நினைவுறுத்திக் கொண்டிருக்கின்றன. பௌத்த-சமண சமயத்தவர் கல்வி பரவுவதற்குப் பெருந்தொண்டு செய்திருக் கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

வச்சிரநந்தி என்னும் சமண சமய முனிவர் மதுரையில் திரமிள (தமிழ்) சங்கம் ஒன்றை ஏற்படுத்தினார் என்று சாசனத்தினால் அறிகிறோம். இவர் அமைத்த தமிழ் சங்கத்துக்கும் பாண்டிய அரசர் அமைத்த தமிழ்ச் சங்கத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. வச்சிரநந்தி அமைத்தது திரமிள சமண முனிவர் சங்கம். அதாவது சமணத் துறவிகளின் அமைப்பு. சமண சமயத் துறவிகளில் சில பிரிவு கள் இருந்தன. அந்தப் பிரிவுகளில் ஒன்று திரமிள கணம், அல்லது தமிழ்ச் சங்கம். இதுபோலவே பௌத்த பிக்குகளின் கூட்டத்துக்கும் சங்கம் என்னும் பெயர் உண்டு. பௌத்த சங்கம் என்றால் பௌத்த பிக்குகளின் கூட்டம் என்பது பொருள். எனவே, சமண சமய முனிவரின் சங்கம் வேறு. பௌத்த பிக்குகளின் சங்கம் வேறு. பாண்டியர் மதுரை யில் தமிழ் ஆராய்வதற்கு அமைத்த புலவர் சங்கம் வேறு. இந்த வேறுபாடுகளை நன்று அறியாமல், சங்கம் என்னும் வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு வச்சிரநந்தி அமைத்த ஜைன முனிவரின் சமண சமயச் சங்கத்தை தமிழ்ப்புலவர் சங்கம் என்று குழப்பி எழுதியவர்களும் உண்டு.

பௌத்த-சமண சமயத்தவர் பள்ளிக்கூடங்கள் வாயிலாகக் கல்வியை வளர்த்தது மட்டும் அல்லாமல் தமிழ் இலக்கியத்திலும் புதிய வளர்ச்சியை உண்டாக்கினார்கள். அப்புதிய வளர்ச்சிகளில் ஒன்று புதிய செய்யுள் அமைப்பு ஆகும். சங்க காலத்தில், பௌத்த-சமணர் வருகைக்கு முன்பு, தமிழிலே அகவற்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நான்குவகைப் பாக்கம் மட்டும் இருந்தன. பௌத்த- சமணர் புதிதாக விருத்தப்பா என்னும் பாவகையைப் புதிதாக அமைத்துத் தமிழ் செய்யுள் வகையை விரிவுபடுத்தினார்கள். இதை அவர்கள் அவசர அவசரமாக, உடனடியாகச் செய்து முடிக்கவில்லை. நிலையாக விருத்தப்பா அமைப்பு நிலை பெறுவதற்குச் சில நூற்றாண்டுகள் (இரண்டு மூன்று நூற்றாண்டுகள்) சென்றிருக்க வேண்டும். இந்த வகையில் பௌத்த-சமணர் செய்த தமிழ்த் தொண்டு பொன் எழுத்தில் எழுதப்படவேண்டிய தொன்றாகும்.