உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திருவிளையாடற் புராணத்தில் பௌத்தமதக்

கதைகள்*

கௌதம புத்தரால் உண்டாக்கப்பட்ட பௌத்த மதம் முற் காலத்தில் இந்தியா முழுவதும் பரவியிருந்தது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் பௌத்தமதம் தமிழ்நாட்டுக்கு வந்தது. தமிழ்நாட்டுக்கு வந்த பௌத்த மதம் பையப் பைய நாடெங்கும் பரவிச் சில நூற்றாண்டுகளாகச் சிறப்படைந்திருந்தது. பௌத்த மதக் கொள்கைகள் மக்களிடையே நன்றாகப் பரவியிருந்தன. கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் தமிழ் நாட்டில் தோன்றி இரண்டு மூன்று நூற்றாண்டுக்குள்ளாகப் பௌத்த மதத்தை அழித்து விட்டது. சைய நாயன்மார்களும். வைணவ ஆழ்வார்களும் பக்தியைப் பரப்பிச் சைவ வைணவ மதங்களை வளர்த்தார்கள். பக்தி இயக்கக் காலத்தில் பௌத்தராக இருந்த பெரும்பாலான மக்கள் சைவ சமயத்தை மேற்கொண்டார்கள். பௌத்தராக இருந்தவர் சைவராக மாறின போதிலும் அவர்களுடைய பழைய பௌத்த மதக் கொள்கைகளை அவர்கள் விட்டுவிடவில்லை. ஆகவே அவர்களுடைய பழைய பௌத்த மதக் கொள்கைகள் சைவ சமயத்தில் இடம் பெற்றன. பாண்டி நாட்டிலே அக்காலத்தில் பௌத்த மதம் சிறப்படைந்திருந்தபடியால் அந்த மதக் கொள்கைகள் பாண்டிநாட்டுத் திருவிளையாடற் புராணத்தில் இடம் பெற்றுள்ளன.

திருவிளையாடற் புராணங்கள்

பாண்டி நாட்டு மதுரையிலே எழுந்தருளியிருக்கும் சொக்கப் பெருமாள் (சோமசுந்தரக் கடவுள்) அறுபத்து நான்கு திருவிளையாடல் களைச் செய்ததாகப் பிற்காலத்துப் புராணங்கள் கூறுகின்றன. இந்தப் புராணங்களில் முக்கியமானது திருவிளையாடற் புராணம். இரண்டு திருவிளையாடற் புராணங்கள் தமிழில் உண்டு. இவற்றின் சமஸ்கிருத மொழி பெயர்ப்பு ஹாலாஸ்ய மகாத்மியம் என்று பெயர் பெற்றிருக் கிறது. இரண்டு தமிழ்த் திருவிளையாடற் புராணங்களில் பழைமை யானது “திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்' இதன்

தில்லி தமிழ்ச் சங்க வெள்ளி விழா மலர் (1971)