உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

25

மதத்திற்கு மகாயான பௌத்தம் என்றும் பெயர்கள் வழங்குகின்றன. இவ்விரு பெரும் பிரிவுகளிலும் அநேக உட்பிரிவுகள் உண்டு.

இலங்கைத் தீவிலே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் நாளது வரையில், பழைய தேரவாத பௌத்தம் நிலைபெற்று உள்ளது. இத்தீவிலேயும் கி.மு. முதல் நூற்றாண்டிலே புதிய கொள்கைகள் பௌத்த மதத்தில் புகத் தொடங்கின. ஆகவே, தேரவாத பௌத்த பிக்குகள் ஒருங்குகூடி, ஆதிக்கொள்கைக்குப் புறம்பான புதிய கொள்கைகள் திரிபிடகத்தில் நுழையாதபடி போற்றவேண்டும் என்னும் கருத்தோடு, அதுவரையும் எழுதா மறையாக இருந்த திரிபிடகத்தை நூல்வடிவமாக எழுதினார்கள். இலங்கைத் தீவை கி.மு. 29 முதல் 17 வரையில் அரசாண்ட வட்ட காமினி அபயன் என்னும் அரசன் காலத்தில் திரிபிடகம் முதல் முதல் நூல் வடிவமாக எழுதப்பட்டது என்று மகாவம்சம் என்னும் நூல் (xxxiii 100-101) ம் கூறுகிறது. இலங்கைத் தீவிலுள்ள மலைய நாட்டிலே, மாத்தளை என்னும் ஊருக்கருகிலிருந்த ஆலோக (அலு) விகாரை என்னும், பௌத்தப் பள்ளியிலே திரிபிடகம் பொற்றகட்டில் எழுதப்பட்டு அவ்விகாரையில் ஒரு கற்பாறையின் கீழ்ச் சேமித்து வைக்கப்பட்ட தென்று கூறப்படுகிறது.

திரிபிடகம், நூல்வடிவமாக எழுதப்பட்ட பிறகும், நெடுநாள் வரையில் வாய்மொழியாக ஓதும் பழக்கம் வழக்காற்றில் இருந்து வந்தது. பின்னர் அவ்வழக்கம் கைவிடப்பட்டது.

பிடகம் என்றால் கூடை என்பது பொருள். எனவே, திரிபிடகம் என்றால், மூன்று கூடை என்று பொருள்படும்; அஃதாவது மூன்று தொகுப்பு என்பது கருத்து. பிடகத்தைப் பிடக்கு என்று தேவாரம் கூறுகிறது. திரிபிடகம் பாலிமொழியில் எழுதப்பட்டிருக்கிறது. தொன்றுதொட்டுப் புத்தரைப் பின்பற்றி வருகிற தேரவாத பௌத்த நூல்கள் எல்லாம் பாலிமொழியிலே எழுதப்பட்டுள்ளன. (பிற்காலத்தில் உண்டான மகாயான பெளத்த நூல்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டவை). பிடகங்களும் அவற்றின் பிரிவுகளும் வருமாறு: விநய பிடகம்:

I.

இரண்டு பிரிவுகளையுடையது. அவை: 1. விநய பிடகம், 2. பாதிமோக்கம் என்பன.