உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

43

பட்ட விகாரையில் தாம் தங்கியிருந்து இந்நூலை எழுதியதாகக் கூறியிருக்கிறார்.

சிலப்பதிகாரத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்ததாகக் கூறப்படுகிற இந்திரவிகாரை என்பது மகேந்திர தேரரால் கட்டப்பட்ட விகாரை என்று ஆராய்ச்சியாளர் கூறுகிறார்கள்.

இவ்வாறு

அசோக

சக்கரவர்த்தியின் சாசனங்களும், ஏனையோர் சான்றுகளும், தமிழ்நாட்டிலே அசோக சக்கரவர்த்தியும் அவர் அனுப்பிய மகேந்திரரும் கட்டிய விகாரைகளும் தூபிகளும் இருந்த செய்தியைக் கூறுகின்றன. ஆகவே, ஏனைய நாடுகளுக்குப் பௌத்த பிக்ஷுக்கள் அனுப்பப்பட்டது போலவே தமிழ்நாட்டிற்கும் அனுப்பப் பட்டிருக்க வேண்டும். அவ்வாறு அனுப்பப்பட்ட வர்கள், மகேந்திர தேரரும் அவருடன் வந்த பிக்ஷக்ஷுக்களாகவும் இருக்க வேண்டும். ஆனால், இச்செய்திகளை இலங்கை நூலாகிய மகாவம்சம் ஏன் கூறாமல் மறைத்துவிட்டது? இதன் காரணம் யாது?

பண்டைக் காலத்தில் தமிழர் இலங்கைமேல் படையெடுத்துச் சென்று அடிக்கடி அந்நாட்டைக் கைப்பற்றி அரசாண்டு வந்தபடி யாலும், அடிக்கடி தமிழருக்கும் சிங்களவரான இலங்கையாருக்கும் போர் நிகழ்ந்து வந்தபடியாலும், மகேந்திரர் தமிழ்நாட்டில் பௌத்த மதத்தைப் போதித்த செய்தியை இலங்கை நூல்கள், பகைமை காரணமாகக் கூறாமல்விட்டன. மகத நாட்டிலிருந்து நேரடியாகப் பௌத்த மதம் தமது இலங்கைத் தீவுக்கு வந்தது என்னும் பெருமையை யடைவதற்காக இலங்கைப் பிக்குகள் இதனை மறைத்துவிட்டார்கள் என்று வின்ஸென்ட் ஸ்மித் என்பவர் கூறுகிறார். 2

இவர் கருத்தையே ஆராய்ச்சி வல்லார் ஒப்புக்கொள்கின்றனர். வடஇந்தியாவிலிருந்து தென் இலங்கைக்கு வந்த மகேந்திரர், கடல் வழியாகப் பிரயாணம் செய்திருக்கவேண்டும் என்றும், அவ்வாறு கடல் பிரயாணம் செய்தவர் இலங்கைக்குச் செல்லும் வழியில் உள்ளதும் அக்காலத்தில் பேர்பெற்று விளங்கியதுமான காவிரிப் பூம்பட்டினத்தில் தங்கியிருக்கக்கூடும் என்றும், அவ்வாறு தங்கியிருந்த காலத்தில் கட்டப்பட்டவைதாம் அந்நகரத்தில் இருந்தனவாகத் தமிழ் நூல்களில் கூறப்படும் இந்திர விகாரைகளென்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.