உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

75

பிள்ளைகளும் சேரச் சீலத்தாலே விளங்கும்படியாகப் பூசைக்கு வேண்டும் பூவினையுடையவராய்த் தூபங்களையுடையராய் வணங்கினராய் மிகுத்துத் துதித்துப் பாதுகாத்தலை நடத்தும் பௌத்தப் பள்ளி, இவ்வுரை நச்சினார்க்கினியர் எழுதியது ஆகும்.

அசோக சக்கரவர்த்தி மதுரைக்குக் கீழ்த்திசையில் கட்டிய ஒரு பௌத்த விகாரை இடிந்து பழுதுபட்ட நிலையில் இருந்த தென்றும், அதற்குச் சற்றுச் சேய்மையில் மகேந்திரர் கட்டிய பௌத்தப் பள்ளி யொன்றும் அழிந்து போகும் நிலையில் இருந்த தென்றும் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் நாட்டில் பிரயாணம் செய்த யுவான் சுவாங் என்னும் சீனர் எழுதியிருக்கின்றார். மதுரையில், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் 'சிந்தா தேவி' என்னும் அம்மன் கோயில் ஒன்று இருந்ததாக மணிமேகலையினால் தெரிய வருகின்றது. இந்தக் கோயிலைப் பௌத்தர்களின் தாராதேவி கோயில் என்று ஆராய்ச்சி யாளரிற் சிலர் கருதுகின்றார்கள்.

அரிட்டாபட்டி:

மதுரை ஜில்லாவில் இப்போது குக்கிராம மாயுள்ள ஓர் ஊர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையை அரசாண்ட தேவனாம்பிரிய திஸ்ஸன் என்னும் அரசனுடைய அம்மானாராகிய அரிட்டர் என்னும் பௌத்த பிக்ஷ, மகேந்திரருடன் சேர்ந்து பாண்டி நாட்டில் பௌத்த மதத்தைப் பரவச் செய்தாரென்றும் அந்த அரிட்டர் என்பவர் இந்த ருக்கு அருகில் உள்ள மலைக்குகையில் வாழ்ந்து வந்தார் என்றும், ஆகவே இவ்வூருக்கு அவர் பெயர் வழங்கலாயிற்று என்றும் ஆராய்ச்சிவல்ல அறிஞர் கருதுகின்றனர். இந்த அரிட்டாபட்டிக் கருகில் உள்ள பௌத்தக் குகைகளில் அசோக மன்னர் காலத்தில் வழங்கிய பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது பண்டைக் காலத்தில் பௌத்தக் கிராமமாயிருந்து, பிற்காலத்தில் அழிந்து இப்போது குக்கிராமமாக இருக்கின்றது.

பொதிகை:

பொதிகை மலையும் பௌத்தர்களின் புண்ணிய மலைகளில் ஒன்றாகப் பிற்காலத்தில் கருதப்பட்டு வந்தது. அந்த மலையில் அவலோகிதீஸ்வரர் என்னும் போதிசத்வர் வீற்றிருக்கிறார் என்பதும், அவரிடம் அகத்தியர் தமிழ் கற்றார் என்பதும் பௌத்தர்களின் கொள்கை. இந்த மலையை அடுத்து ‘மலைய நாடு' என்னும்