உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

127

கொண்டிருந்தவர்களும் தடுக்கவில்லை. குமாரன் பகவரைப் பின் தொடர்ந்து விகாரைக்குச் சென்றார்.

6

பகவன் புத்தர், எனக்குப் போதிமண்டலத்திலே கிடைத்த ஏழு விதமான உத்தம தனத்தை இவனுக்குக் கொடுப்பேன் என்று தமக்குள் நினைத்து, சாரிபுத்திர தேரரை அழைத்து, இராகுல குமாரனுக்குச் சந்நியாசம் தரும்படிச் சொன்னார். சாரிபுத்திர தேரர், “சுவாமி, எப்படிச் சந்நியாசம் கொடுப்பேன்?" என்று கேட்க, பகவர், திரிசரணத்தை எடுக்கச் செய்து ஸாமநேர சந்நியாசத்தைக் கொடுக்கச் சொன்னார். அவ்வாறே இராகுல குமாரனுக்குச் சந்நியாசம் கொடுக்கப்பட்டது.

இராகுல குமாரனுடைய சந்நியாசத்தைச் சுத்தோதன அரசர் அறிந்து மிகவும் விசனமடைந்தார், அவர் பகவன் புத்தரிடம் வந்து, வணக்கம் செய்து ஒரு பக்கத்திலே இருந்து, பெற்றோர்களுடைய அனுமதியில்லாமல் சிறுவர்களுக்குச் சந்நியாசம் கொடுக்கக் கூடாது என்னும் வரந்தரும்படி வேண்டிக் கொண் டார். பகவன் புத்தர் அதற்கு இணங்கிப் பிக்ஷுக்களை அழைத்து "பிக்ஷக்களே! இனிப் பெற்றோருடைய அனுமதி கிடைக்காத சிறுவர்களுக்குச் சந்நியாசம் கொடுக்காதீர்கள்” என்று கூறிச் சட்டம் செய்தார்.

அடுத்த நாள், சுத்தோதன அரசருக்கும் கௌதமி தேவிக்கும் பிறந்த நந்தகுமாரனுக்கு இளவரசுப் பட்டமும் திருமணமும் நடக்க ஏற்பாடாகியிருந்தது. பகவன் புத்தர், நந்தகுமாரனுடைய மாளிகைக்குச் சென்று, உணவு அருந்தி பிக்ஷாபாத்திரத்தை நந்தகுமாரன் கையில் கொடுத்து முன்னே நடந்தார். நந்தகுமரன் அவரைப் பின்தொடர்ந்து சென்றான். அப்போது, மணப் பெண்ணாகிய ஜனபத கல்யாணி என்பவள், நந்தகுமரனைக் கண்ணால் பார்த்து, "ஓ. கணவரே! உடனே விரைவாகத் திரும்பி வாருங்கள்” என்று கூறுவது போல நோக்கினாள். குமரனும் அதனை அறிந்து, 'பாத்திரத்தை எப்போது வாங்கிக் கொள்வார்' என்று நினைத்த வண்ணம் பின்தொடர்ந்தான்.

பகவர் விகாரைக்குச் சென்றார்; குமரனும் மரியாதையோடு பின்தொடர்ந்தான். அப்போது பகவர் நந்தனைப் பார்த்து, “நந்தா! நீ சந்நியாசம் பெறுவதற்கு விரும்புகிறாயா?" என்று கேட்டார். அவனும் “ஆம்” என்று விடை கொடுத்தான். பகவன் புத்தர் நந்தகுமாரனுக்குச் சந்நியாசம் கொடுத்தார்.