உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

இவ்வுலகத்திலே தாயை வணங்குவது மகிழ்ச்சிக்குரியது. தந்தையை வணங்குவது மகிழ்ச்சிக்குரியது. துறவிகளை வணங்குவது மகிழ்ச்சிக்குரியது. பேரறிஞராகிய ஞானிகளை வணங்குவது மகிழ்ச்சிக்குரியது.

முதுமைப் பருவம் வருவதற்கு முன்பே சீலத்தைக் கடைப் பிடிப்பது மகிழ்ச்சிக்குரியது. அறநெறியில் உறுதியான நம்பிக்கையோடு இருப்பது மகிழ்ச்சிக்குரியது. அறிவை வளர்ப்பது மகிழ்ச்சிக்குரியது. பாவத்தை விலக்குவது மகிழ்ச்சிக்குரியது.

மனம் வாக்கு காயங்களினால் தீய காரியங்களைச் செய்யாமல் இம் மூன்றினையும் அடக்கி ஆள்கிறவர் யாரோ அவரை நான் பிராமணன் என்று அழைக்கிறேன்.

மயிரை வளர்ப்பதனாலோ, பிறப்பினாலோ, கோத்திரத்தினாலோ ஒருவர் பிராமணர் ஆகமாட்டார். யாரிடத்தில் உண்மையும் அறநெறி யும் இருக்கிறதோ அவரே தூய்மையானவர். அவர்தான் பிராமணர் ஆவார். எந்தப் பிராணியையும் அடித்துத் துன்புறுத்தாமலும்; கொல்லாமலும்; கொல்லச் செய்யாமலும் இருக்கிறவர் யாரோ அவரை நான் பிராமணன் என்று அழைக்கிறேன்.

முன்பும் பின்பும் எப்போதும் பற்றுகள் இல்லாமல், உலக ஆசைகளை நீக்கிப் பற்றற்றவர் யாரோ அவரையே பிராமணன் என்று கூறுகிறேன்.

ஒருவர் புத்த தர்மங்களை முழுவதும் கற்று மிக உரக்க ஓதி உபதேசித்தாலும் அவர் அச்சூத்திரங்கள் கூறுகிறபடி நடக்க வில்லை யானால், பிறருடைய பசுக்களைக் கணக்கெண்ணிக் கொண்டிருக்கும் இடையனை யொப்ப, துறவிகள் அடைய வேண்டிய பலனை அவர் அடையமாட்டார்.

ஒருவர், புத்த தர்மங்களைச் சிறிதளவு ஓதினாலும் அவை கூறுகிறபடி நடந்து, ஆசை, பகை, மோகம் முதலியவைகளை நீக்கி, நற்காட்சி பெற்று மனமாசு அற்று இருவகைப் பற்றுக்களையும் விட்டவ ரானால், அவரே உண்மையில் துறவிகள் அடையும் உயர்ந்த பலனை அடைவார்.