உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

வற்புதக் குழந்தை எல்லாக் கல்விகளையும் கல்லாமலே கற்றிருக்கிறது. நான் உலகத்துக் கல்வி ஒன்றையே கற்றிருக்கிறேன். இக் குழந்தை தெய்வீகக் கல்வியையும் அறிந்திருக்கிறது. இவ்வாறு ஓதாமலே உணர்ந்த இக் குழந்தை என்னிடம் கல்வி கற்க வந்திருப்பது வியப்பாகும்,” என்று கூறி வியப் படைந்தார்.

பிறகு விசுவாமித்திரர் மற்றச் சாக்கியச் சிறுவர் ஐந்நூற்று வருக்கும் கல்வி கற்பித்துவந்தார். சித்தார்த்த குமாரன் ஓதாமலே எல்லாக் கல்வியையும் உணர்ந்து கொண்டார்.

இவ்வாறு நிகழுங் காலத்தில், அரசகுமாரர் பயில வேண்டிய படைக் கலப் பயிற்சியையும், போர் முறைகளையும் சித்தார்த்த குமாரனுக்குக் கற்பிக்கச் சுத்தோதன அரசர் எண்ணங்கொண்டார். அவர் அமைச்சர் களுடன் கலந்து, வில்வித்தையில் வல்லவர் யார் என்பதை ஆலோசித் தார். அப்போது அமைச்சர்கள் “சுப்ரபுத்தர் என்பவருடைய மகனான சாந்திதேவர் ஆயுதப் பயிற்சியில் வல்லவர். அவரே சித்தார்த்த குமாரனுக்கு ஆசிரியராக இருக்கத் தக்கவர்” என்று கூறினார்கள்.

சுத்தோதன அரசர், சாந்திதேவரை அழைத்துச் சித்தார்த்த குமாரனுக்குப் படைக்கலப் பயிற்சி கொடுக்கும்படி கேட்டார். சாந்திதேவரும் மனமகிழ்ந்து இசைந்தார்.

சித்தார்த்த குமாரனும் ஐந்நூறு சாக்கியக் குமாரரும் சாந்தி தேவரிடம் படைக்கலப் பயிற்சிபெற ஒப்படைக்கப்பட்டார்கள். பயிற்சி செய்வதற்குரிய பெரியதோர் தோட்டத்திலே இவர்கள் பயிற்சி செய்யத் தொடங்கினார்கள். சாந்திதேவர், சித்தார்த்த குமாரனுக்கு வில்வித்தை ஆரம்பித்து வைக்கத் தொடங்கினார். அப்போது சித்தார்த்த குமாரன் அவரைப் பார்த்து, "ஆசிரியரே! என்னைப் பொறுத்தவரையில் எனக்கு நானே வித்தைகளைக் கற்றுக்கொள்கிறேன். இவர்களுக்குப் பயிற்சியைக் கற்பித்துக் கொடுங்கள்” என்று வணக்கமாகக் கூறினார்.

சாந்திதேவர் மற்ற எல்லோருக்கும் வில்வித்தை, வாள் வித்தை, வேல்வித்தை, யானையேற்றம் குதிரை ஏற்றம், தேர் ஓட்டம் முதலிய போர்ச் செயலுக்குரிய எல்லா வித்தைகளையும் ஐயம் திரிபு இல்லாமல் நன்கு கற்பித்தார். இவ்வித்தைகளில் எல்லோரும் தேர்ச்சியடைந்து சிறந்து விளங்கினார்கள். சித்தார்த்த குமாரனும் இவ் வித்தைகள் எல்லாவற்றிலும் தமக்குத் தாமே கற்றுத் தேர்ந்தார்.