உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

தேவேந்திரனுடைய கொடிபோன்ற பெரிய கொடி யொன்றை, எண்ணிறந்த மக்கள் கூட்டமாகச் சூழ்ந்து தூக்கிக் கொண்டு கபிலவத்து நகரத்தின் வழியாகச் சென்று கிழக்கு வாயில் வழியாகப் போனார்கள்.

சித்தார்த்த குமாரன் அமர்ந்திருந்த தேரைப் பத்துப் பெரிய யானைகள் இழுத்துக்கொண்டு நகரத்தின் தென்புற வாயில் வழியாகச் சென்றன.

6

நான்கு வெண்ணிறக் குதிரைகள் பூட்டப்பட்ட உன்னதமான தேரிலே சித்தார்த்த குமாரன் அமர்ந்து நகரத்தின் மேற்குவாயில் வழியாகச் சென்றார். நவமணிகள் பதிக்கப்பட்ட பெரிய சக்கராயுதம் ஒன்று சுழன்ற வண்ணம் ஆகாயத்தில் பறந்து நகரத்தின் வடக்குப்புற வாயில் வழியாகச் சென்றது.

நகரத்தின் நான்கு சாலைகள் கூடுகிற நாற்சந்தியிலே சித் தார்த்த குமாரன் அமர்ந்து பேரொலி யுண்டாகும்படி முரசைக் கொட்டிக் கொண்டிருந்தார்.

நகரத்தின் நடுவே ஒரு உயரமான இடத்தில் அமர்ந்து சித் தார்த்த குமாரன் முத்து, மணி, மாணிக்கம், இரத்தினம் முதலியவற்றைச் சிதறிக் கொண்டிருக்க அவற்றை மக்கள் திரண்டுவந்து பொறுக்கிக் கொண்டிருந்தார்கள்.

இவ்வாறு கனவுகளைக் கண்ட சுத்தோதன அரசர் விழித் தெழுந்தார். நிமித்திகர்களை அழைத்து இக்கனவுகளின் கருத்தைத் தெரிவிக்கும்படிக் கேட்டார். அவர்கள் இக்கனவுகளின் கருத்துத் தெரியாமல் திகைத்தார்கள். ஒரு நிமித்திகர் நெடுநேரம் யோசித்து இவ்வாறு விளக்கம் கூறினார்.

கொடியை மக்கள் தூக்கிக்கொண்டு போனது, சித்தார்த்த குமாரன் தேவர்கள் சூழ இந்நகரத்தை விட்டு வெளிச்சென்று துறவு கொள்வார் என்பதைக் குறிக்கிறது.

பத்து மதயானைகள் இழுத்த தேரை ஊர்ந்துசென்றது, பத்துப் பாரமிதைகளைச் செய்திருப்பதனாலே, அப்பாரமிதைகளின் உதவிகொண்டு சித்தார்த்த குமாரன் உயர்ந்த போதிஞானம் அடைவார் என்பதைக் குறிக்கிறது.