உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - கௌதமபுத்தரின் வாழ்க்கை

மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் 1956 இல் கௌதமபுத்தர் என்று வெளியிட்ட நூல் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது. பௌத்த சமயம் தொடர்பான கதைகளில் புத்தர் தொடர்பாக வரும் செய்திகளைத் திரட்டி இந்நூலை உருவாக்கியுள்ளார். இளம்வயதில் புத்தரின் வாழ்க்கை எவ்வகையில் அமைந்திருந்தது என்பது குறித்து முதல் நிலையில் எழுதியுள்ளார். இரண்டாம் பகுதியில் அவர் துறவுமேற்கொண்டமை தொடர்பான செய்திகள் விரிவாகப் பதிவாகியுள்ளன. பின்னர், அவர் போதி மரத்தை அடைந்து ஞானம் பெற்ற வரலாறு பேசப்படுகிறது. அவ்விதம் பெற்ற ஞானத்தை எவ்வகையிலெல்லாம் பரப்புரை செய்தார் என்பது இந்நூலின் இறுதிப் பகுதியாக அமைந்துள்ளது.

பௌத்தமும் தமிழும் என்ற நூலை 1940 களில் உருவாக்கிய மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் தொடர்ச்சியாக பௌத்தம் தொடர்பான பதிவுகளைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1952இல் பௌத்தக் கதைகள் என்ற நூலையும் எழுதினார். 1960இல் புத்தர் ஜாதகக் கதைகள் என்ற நூலும் இவரால் எழுதப்பட்டது. இவ்வகையில் தமிழ்ச்சமூகத்தில் பொதுவெளியில் பௌத்தம் தொடர்பான விரிவான பதிவுகளைச் செய்தவர்களில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர் களுக்குக் குறிப்பிடத்தக்க இடம் இருப்பதாகக் கருதலாம்.

கௌதமபுத்தரின் வாழ்க்கை என்ற இந்த இந்நூல் மிகவும் எளிய மொழியில் வெகுசன வாசிப்பிற்கு ஏற்றவகையில் அமைந்திருப்பதைக் காண்கிறோம். மயிலை சீனிவேங்கடசாமி நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்ட பிறகு, தமிழில் உள்ள பல பதிப்பகங்கள் இந்நூலை மறு அச்சு செய்திருப்பதைக் காண்கிறோம். ஒரே பொருள் தொடர்பாக வந்துள்ள செய்திகளை ஆய்வாளர்களுக்குப் பயன்படும் நோக்கில் இத்தொகுப்பில் சேர்த்துள்ளோம்.

இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி. சென்னை-96

ஏப்ரல் 2010

தங்கள் வீ. அரசு

தமிழ் பேராசிரியர் தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம்