தமிழில் சமயம் - கௌதம புத்தரின் வாழ்க்கை
73
ஐந்து கனவுகள்
ஒரு வைகாசித் திங்கள் வளர்பிறையின் பதினான்காம் நாள் இரவு போதிசத்துவராகிய கௌதமமுனிவர் கண் உறங்கிக் கொண்டிருந்தபோது கடைசி யாமத்திலே ஐந்துவிதமான கனவுகளைக் கண்டார். அந்தக் கனவுகள் இவை :
இந்தப் பரதகண்டம் பாய்போலவும் இமயமலை (மேரு மலை) தலையணை போலவும் கிடந்தன. இந்தப் பாயிலே கௌதமமுனிவர் மல்லாந்து படுத்துக்கொண்டிருப்பது போலவும் அவருடைய வலதுகை மேற்கிலும் இடதுகை கிழக்கிலும் கால்கள் தெற்கிலும் இருப்பது போலவும் கனவுகண்டார். இந்தக் கனவின் கருத்து என்னவென்றால், போதிசத்துவராகிய கௌதமமுனிவர் கட்டாயமாகப் புத்த பதவியையடைவார் என்பதே.
இவ்வாறு படுத்திருக்கும்போது தம்முடைய நாபியில் (கொப்பூழ்) இருந்து, சிவந்த நிறமுள்ள கம்புச்செடி ஒன்று உயரமாக வானம் வரையில் வளர்ந்து சென்றதுபோலக் கனவு கண்டார். இந்தக் கனவின்பொருள் ஆரிய (உயர்ந்த) அஷ்டாங்க மார்க்கத்தைத் தாமே கண்டறிந்து அதை மக்களுக்குப் போதிக்கப்போகிறார் என்பது.
பின்னர்க் கருமையான தலையும் வெண்மையான உடலும் உள்ள சிறு பூச்சிகள் கூட்டமாக வந்து இவருடைய கால் நகங்களை மொய்த்துக்கொண்டன. பின்னர் அவை கொஞ்சங்கொஞ்சமாக முழங்கால்வரையிலும் ஏறிவந்து மொய்த்துக் கொண்டன. இந்த மூன்றாவது கனவின் கருத்து என்னவென்றால், இல்லறத்தார் இவரிடம் வந்து இவருடைய உபதேசங்களைக் கேட்டு, இவருக்கு உபாசகத் தொண்டர்கள் ஆவார்கள் என்பதாகும்.
பின்னர், நான்கு திசைகளினின்றும் நான்குவித நிறமுள்ள பறவைகள் பறந்துவந்து தம்முடைய காலடியில் தங்கித் தம்மை வணங்கியதாகக் கனவுகண்டார். இதன் கருத்து, பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு சாதி மக்கள் இவரிடம் வந்து உபதேசம்பெற்றுத் துறவுகொள்வார்கள் என்பது.
ஐந்தாவதாக, மலக்குவியலின்மேல் நடந்து சென்றது போலவும் ஆனால், கொஞ்சமும் காலில் மலம் ஒட்டாதது போலவும் கனவுகண்டார். உணவு உடை முதலியவை இவருக்குக் கிடைத்தாலும் அவற்றின்மீது இவருக்குப் பற்றுதல் இருக்காது என்பது இந்தக் கனவின் கருத்தாகும்.