உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - கௌதம புத்தரின் வாழ்க்கை

93

அடியில் இருப்பதைக்கூறி அவருக்கு உணவு தானம் செய்யும்படிக் கூறிற்று.

தெய்வ வாக்கைக் கேட்ட வணிகத் தலைவர் இருவரும் தேனையும் மாவையும் எடுத்துக்கொண்டு பகவன் புத்தர் எழுந்தருளி யிருந்த இடத்திற்கு வந்தார்கள். வந்து அவரை வணங்கி அவருக்கு அந்த உணவைக் கொடுத்தார்கள். அப்போது அதை ஏற்றுக்கொள்ளப் பகவரிடம் பாத்திரம் ஒன்றும் இல்லை. இவர்கள் கொடுக்கும் உணவைக் கைகளில் பெறக்கூடாது, எதில் பெற்றுக்கொள்வது என்று அவர் சிந்தித்தார். அப்போது அவருடைய சிந்தனையை அறிந்த சதுர்மகா தேவர்கள் நால்வரும் வந்து நான்கு பாத்திரங்களை அவருக்கு அளித்தார்கள். அப் பாத்திரங்களைப் பெற்றுக்கொண்ட பகவன், அவைகளை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிவைத்தார். உடனே அப்பாத்திரங்கள் ஒரே பாத்திரமாயின. அப் பாத்திரத்திலே வணிகச் சகோதரர் அளித்த உணவை ஏற்றுக் கொண்டார்.

உணவை உட்கொண்ட பிறகு பகவர், கையையும் பாத்திரத்தை யும் கழுவினார். பிறகு அவர்களுக்கு அறநெறியை உபதேசம் செய்தார். அறநெறியைக் கேட்ட வணிகர் மனமகிழ்ச்சியடைந்து பகவரை வணங்கி, “பகவரே! நாங்கள் தங்களிடத்திலும் தங்கள் தர்மத்தினிடத்திலும் அடைக்கலம் அடைகிறோம். எங்களைச் சீடர்களாக ஏற்றுக் கொண்டருள வேண்டும்" என்று வேண்டினார்கள். பிறகு தாங்கள் வணங்குவதற்காக ஏதேனும் பொருளைத் தரும்படி அவரைக் கேட்டார்கள். பகவர் தமது தலையிலிருந்து எட்டுப்பிடி சிகையைப் பிய்த்துக்கொடுத்தார். அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டு போய் பொற்கிண்ணத்தில் வைத்துத் தாம் பிறந்த தேசத்திலேயுள்ள அசிதஞ்சன நகரத்தில் ஒரு சேதியம் கட்டி அதை அதில் வைத்து வணங்கி வந்தார்கள்.

தபுஸ்ஸன், பல்லிகன் என்னும் இவர்கள் தாம் முதன் முதல் பகவன் புத்தரிடத்தில் இரண்டு சரணங்களை மட்டும் (புத்தர், தர்மம்) கூறிச் சீடரானவர்கள்.

எட்டாவது வாரம்

பிறகு பகவர் இராஜாயதன மரத்தைவிட்டுப் புறப்பட்டு மறுபடி யும் அஜபால ஆலமரத்துக்குச் சென்றார். சென்று அவ்விடம் தங்கித்