பக்கம்:மயில்விழி மான்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

மயில்விழி மான்

மறுபடியும் அந்தக் குழந்தை, "ஏன் மாமா! பதில் சொல்லுங்கள். நான் பிச்சை எடுப்பதாக யார் சொன்னார்கள்? நான் ஒன்றும் பிச்சை எடுக்கவில்லை! கச்சேரி செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு வருகிறேன். இருநூறு ரூபாய் முந்நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு பாடினால் அது மட்டும் கச்சேரியா? இரண்டு அணா, மூன்று அணா வாங்கிக் கொண்டு பாடினால் அது பிச்சையா?" என்றாள்.

நான் அதற்குப் பதில் சொல்ல முடியாமல் திணறிப் போனேன். என்னை அறியாமல் பூரிப்புப் பொங்கி வந்தது. அவள் தாயாரின் முகத்திலும் கொஞ்சம் புன்னகையைக் கண்டேன். கலகலவென்று சிரித்துக் கொண்டே குழந்தையைக் கட்டி அணைத்துக் கொண்டு "நீ ரொம்பக் கெட்டிக்காரப் பெண்! பலே சமர்த்து! என்னுடன் வந்துவிடு! உன்னைப் பெரிய சங்கீதக்காரியாக்கிவிடுகிறேன்" என்றேன்.

அப்போது மரகதமணி "அப்படியே செய்யுங்கள் ஐயா! இவளைச் சமாளிக்க என்னால் முடியவில்லை! நீங்கள் அழைத்துக் கொண்டு போங்கள்!" என்றாள்.

பேச்சு வாக்கில் ஏதோ சொல்லி வைத்தேன். அவ்வாறு காரியத்தில் நடந்தேறும்படி கடவுள் செய்து விட்டார். ஆறு மாதத்துக்கெல்லாம் மரகதமணி இறந்து போனாள். இந்தக் குழந்தை பட்ட துயரத்தை என்னால் சொல்ல முடியாது. நல்ல வேளையாக அச்சமயம் நான் கும்பகோணத்தில் இருக்கும்-