பக்கம்:மயில்விழி மான்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

மயில்விழி மான்

ரணமாய் மனம் வருவதில்லை. எப்போதாவது அருமையாக அவளைக் கோபித்துக் கொண்டால் என் வீட்டில் எல்லோரும் என் பேரில் சண்டைக்கு வந்தார்கள்.

எப்படியோ குழந்தைக்கு நல்ல வார்த்தை சொல்லித் தாஜா பண்ணிப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வந்தேன். வெகு நன்றாகப் படிப்பும் வந்து கொண்டிருந்தது. ஆனால் நடுநடுவில் பழைய பழக்க வழக்கங்கள் வந்து கொண்டிருந்தன. திடீரென்று ஒரு நாள் பள்ளிக்கூடத்திலிருந்து காணாமற் போய் விடுவாள். ஊரில் உற்சவம் ஏதாவது நடந்தால் அங்கே வேடிக்கைப் பார்க்கப் போய் விடுவாள். பாட்டுப் பாடிக் காசு வாங்கவும் ஆரம்பித்து விடுவாள். சில சமயம் ரெயில்வே நிலையத்துக்குப் போய் ரெயில் ஏறிப் பாடத் தொடங்கி விடுவாள். இரண்டு மூன்று ஸ்டேஷன் பாடிக்கொண்டு போய்விட்டு, "குழந்தையைக் காணோமே?" என்று எல்லோரும் கவலையுடன் தேடிக் கொண்டிருக்கும் சமயத்தில் கையில் எட்டணா ஒரு ரூபாய்க் காசுடன் திரும்பி வருவாள்.

நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். "குழந்தை! நான் இந்த ஊரில் கௌரவமாய் வாழ்க்கை நடத்துகிறேன்! என் மானத்தை வாங்காதே!" என்று அடிக்கடி எடுத்துச் சொன்னேன்.

"நான் எங்கேயோ கிடந்து வந்தவள் என்று தான் எல்லோருக்கும் தெரியுமே, மாமா! உங்களுக்கு என்னால் கௌரவக் குறைவு எப்படி ஏற்படும்?" என்று அவள் ஒரு சமயம் பதில் சொல்வாள்.