பக்கம்:மயில்விழி மான்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடகக்காரி

87

எல்லோரும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் மாதக்கணக்காகச் சம்பளம் கொடுக்கப்படவில்லை. கொட்டகை முதலாளியும் இன்னும் பலரும் தங்களுக்குச் சேரவேண்டிய பாக்கிக்காக வந்து கொண்டிருந்தார்கள்.

நாடகக் கம்பெனிகளுக்குப் பெயரும் புகழும் பெருகுவதையொட்டிப் பணச் செலவும் அதிகமாகிக் கொண்டுவரும். ஆட்கள் அதிகமாகச் சேர்ந்து கொண்டுவருவார்கள். ஆடம்பரம் பெருகிக் கொண்டு வரும். காட்சி ஜோடனைகளில் பணம் ஏராளமாகப் போய்க் கொண்டேயிருக்கும்; சுற்றி உள்ளவர்கள் பிய்த்துப் பிடுங்கிக் கொண்டிருப்பார்கள்.

திடீரென்று ஒரு நாள் கம்பெனியை மூடும்படி நேர்ந்தால், கம்பெனிச் சொந்தக்காரரின் கதி அதோகதிதான்.

ஏதோ கடவுள் என்னை அச்சமயத்தில் அங்கே கொண்டு போய்ச் சேர்த்தார். நான் கணக்கு வழக்குகள் பார்த்து, கொடுக்க வேண்டியவர்களுக்கெல்லாம் ஒன்றுக்குப் பாதி கொடுத்துத் தீர்த்தேன். மொத்த முடிவில், நமச்சிவாயத்துக்குக் கடன்பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் தங்கி நின்றது.

கும்பகோணத்தில் எனக்குத் தெரிந்த நல்ல டாக்டர் இருப்பதையும், அவரிடம் வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம் என்றும் சொல்லி நமச்சிவாயத்தையும், நீலமணியையும் அழைத்துக் கொண்டு போனேன். கும்பகோணத்தில் எனக்கு ஒரு வீடு இருந்தது. அந்த