பக்கம்:மயில்விழி மான்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

மயில்விழி மான்

போதெல்லாம் அடி வயிறு விம்மி எழுந்து மார்பை அடைத்தது. ஒவ்வொரு தடவை பட்டாசு வெடித்த போதும் என் தலையில் ஏதோ வெடித்தது போல் தோன்றியது.

கடைத் தெருவில் சிறிது வண்டியை நிறுத்தி, நமச்சிவாயத்துக்குப் புது வேஷ்டியும், நீலமணிக்குப் புதுச் சேலையும் வாங்கிக் கொண்டு போனேன். வீட்டை நெருங்க நெருங்க, என் நெஞ்சுத் துடிப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது.

உடனேயே ஐயம்பேட்டைக்குத் திரும்ப நான் விரும்பியபடியால், வண்டியைப் பூட்டு அவிழ்க்காமல் அப்படியே நிறுத்தி வைக்கச் சொல்லிவிட்டு புது வஸ்திரப் பொட்டணங்களுடன் வீட்டுக்குள் நுழைந்தேன்.

உள்ளே இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டு நடையில் சிறிது தயங்கி நின்றேன்.

"விடுகிறாயா மாட்டாயா?"

"விடமாட்டேன்!"

"என்னைத் தடுக்க உனக்கு என்ன அதிகாரம்?"

"என்னைத் தாலி கட்டி நீங்கள் கல்யாணம் செய்து கொள்ளவில்லையா? அந்த அதிகாரந்தான்!"

"நீ எனக்கு மனைவியும் அல்ல; நான் உனக்குப் புருஷனும் அல்ல, உன் மாமாவுக்காகச் செய்த