பக்கம்:மருதநில மங்கை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை159


நோக்கினாள். ஆங்கு அவள் கண்ட காட்சி, அவளைப் பெரிதும் கலக்கி விட்டது. ஒரு பெண் தோளில் தொடியும், கூந்தலில் மலரும், காதில் மகரக்குழையும், வேறுபிற அணிகளும் அணிந்து ஆங்கு நிற்பதைக் கண்டாள். அணிவகைகளாலும், கூந்தல் மலர்க் குவியலாலும் உண்டான பாரத்தைத் தாங்க மாட்டாது ஒடிந்துவிடுமோ என அஞ்சுமாறு சிறுத்திருந்தது அவள் இடை. அவள் காலில் சிலம்பு ஒலித்தது. அவள் கண்கள் சிவந்திருந்தன. அதனால், அவள் யார் மீதோ சினங் கொண்டுள்ளாள் என்பதை அறிந்தாள். இளைஞன் காதலிக்கும் பரத்தை அவளே. இளைஞன் அன்று தன் மனைக்கு வாராமையால் வருந்தி, மழையையும், மையிருளையும் பொருட்படுத்தாது, அவனைத் தேடி வந்தாள். தன் காதல் நோயை அடக்கி, ஊரார் கூறும் அலர் உரைக்கு அஞ்சித் தன் உருவை மறைத்துக் காதலனைக் காணப் போகிறோம் என்ற மகிழ்ச்சி தந்த செருக்கோடு வந்திருந்தாள். ஆங்கு அவளைக் கண்ட இளைஞன் மனைவி, அங்கு என்ன நிகழ்கிறது என்பதை, அவ்விருவர் கண்ணிலும் படாவாறு கரந்து நின்று காணத் தொடங்கினாள்.

கதவைப் புடைத்தும், காற்சிலம்பை இயக்கியும் ஒலியெழுப்பி நின்ற பரத்தை, அவ்வொலி கேட்டு எழுந்து வந்து, கதவைத் திறந்து வாயிற்கண் நிற்கும் இளைஞனைக் கண்டதும், கடுங்கோபம் கொண்டாள். அவன் மார்பில் கிடந்து மணம் நாறும் மலர் மாலையைப் பற்றி ஈர்த்துப் பிய்த்து எறிந்தாள். இளைஞன் அவள் சினம் கண்டு அஞ்சினான். அவள் காலில் வீழ்ந்து பணிந்தான். “தீமை ஏதும் செய்திலேன். உன்னை நான் மறப்பதும் செய்யேன். இது உண்மை. இன்று வாராமைக்கு, இம்மழையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/161&oldid=1130035" இலிருந்து மீள்விக்கப்பட்டது