பக்கம்:மருதநில மங்கை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை239


அவன் மேற்கொண்ட பரத்தையர் தொடர்பு, அவன் புகழ்க் கேட்டிற்குக் காரணமாதலை எடுத்துக்காட்டினார். காட்டிய பின்னர், “ஐய! நீயோ, உலகில் வாழ்வார் எவரே ஆயினும், எத்தகைய கொடியரே ஆயினும், அவர் துயர் துடைத்து வாழ்வளிக்கும் விழுமியோனாகுவை. அத்தகைய உன்னை, 'நீயே துணை’ என உன்னை வந்தடைந்த உன் மனைவி, தன் இயற்கை அழகும் இழந்து அழிகிறாள். அவள் அவ்வாறு வருந்த, நீ ஈங்கு வந்து வாழ்கின்றாய். இது நனி மிகக் கொடிது!’ எனக் கூறிக் கண்டித்தல் தகுமோ? அவ்வாறு நான் கடிந்து கூறித் திருத்துமாறு பிழை நெறியுடையையாதல் உனக்குப் பொருந்தாது!” என்று கூறிக் கண்டித்தார்.

“ஈண்டு நீர்மிசைத் தோன்றி இருள்சீக்கும் சுடரேபோல்,
வேண்டாதார் நெஞ்சுஉட்க வெருவந்த கொடுமையும்
நீண்டு தோன்று உயர்குடை நிழல்எனச் சேர்ந்தார்க்குக்
காண்தகு மதிஎன்னக் கதிர்விடு தண்மையும்,
மாண்டநின் ஒழுக்கத்தால் மறுவின்றி வியன் ஞாலத்து 5
யாண்டோரும் தொழுதேத்தும் இரங்குஇசை முரசினாய்!

ஐயம்தீர்ந்து ‘யார்கண்ணும், அருந்தவமுதல்வன்போல்
பொய்கூறாய்’ என நின்னைப் புகழ்வது கெடாதோதான்,
நல்கி நீ தெளித்தசொல் நசைஎனத் தேறியாள்
பல் இதழ் மலர் உண்கண் பனிமல்கக் காணுங்கால்? 10

‘சுரந்தவான் பொழிந்தன்றாச் சூழநின்று யாவர்க்கும்
இரந்தது நசைவாட்டாய் என்பது கெடாதோதான்,
கலங்கு அஞர்உற்று நின்கமழ்மார்பு நசைஇயாள்
இலங்கு கோல் அவிர்தொடி இறைஊரக் காணுங்கால்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/241&oldid=1130266" இலிருந்து மீள்விக்கப்பட்டது