பக்கம்:மருதநில மங்கை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை37


மிக்க பேரரசன் ஒருவன், தன் நாற்படையும் புடைசூழ வந்து, மதிலை வளைத்துக் கொள்ள, உள்ளே ஆற்றல் இழந்து அடைபட்டுக் கிடக்கும் அரசன், இரவெல்லாம் உறக்க மற்றுக் கிடந்து, விடியற்காலையில் சிறிதே உறக்கம் கொள் பொழுதில், மதிற்புறத்தே உள்ள பகையரசன் பாசறையில், பள்ளி எழுச்சி குறித்து எழுப்பும் முரசொலி கேட்டுக், கண்ணிமை விழித்துக் கலங்குவான் போல் கலங்கி வாழ்ந்தாள் அப் பெண்.

அத்தகைய நாட்கள் பல கழிந்தன. ஒரு நாள், இளைஞன் தன் வீட்டிற்கு வந்தான். மனைவியின் தோழியைக் கண்டு, “என் மனைவி என்மீது கொண்டிருக்கும் கோபத்தைப் போக்கி, என்னை அவள் ஏற்றுக் கொள்ளத் துணை புரிவாயாக!” என வேண்டிக் கொண்டான். அவனால், அவன் மனைவி படும் பெருந்துயரைப் பார்த்திருப்பவளாதலின், அத் தோழி அவன்பால் கடுஞ்சினம் கொண்டிருந்தாள். அவன் பிழைகளைப் பொறுத்து அவனை ஏற்றுக் கொள்ள அவன் மனைவி இசையினும், அவள் இசையாள். அவன்பால், அவளுக்கு அத்துணைக் கடுங்கோபம். அதனால், அவனை, ‘ஈங்கு வாரற்க!’ எனக் கூறி வழிமறிக்க விரும்பினாள். ஆனால், அது முறையாகாது என்றது, அவள் பண்பறியுள்ளம். மேலும், அவன் பரத்தையர் ஒழுக்கத்திற்குக் காரணமாயிருந்தவன், பண்டெல்லாம் தம் மனைக்கு வந்து பாடிப் பரிசில் பெற்றுப் பிழைத்த பாணனே யாதலின், அவன் மீதும், அவள் கடுங்கோபம் சென்றது. அதனால், முதற்கண், அவன் ஒழுக்கக் கேட்டினையும், அதனால் உறக்கமும் இல்லாமல், அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/39&oldid=1129457" இலிருந்து மீள்விக்கப்பட்டது