பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21

பெற்று வந்துள்ளது. கடந்த பல நூற்றாண்டுகளாகத் தமிழர்களின் வாழ்வில் சமய வழிப்பட்ட சிந்தனையும் புராணக் கற்பனையுமே மேம்பட்டு நின்றதால், உலகியல் வாழ்விலும் அறிவியல் எண்ண வளர்ச்சியிலும் பின்தங்கி விட்டனராதலின், தமிழ்மொழியும் அறிவியல் துறையில் புத்தாக்கம் பெறும் வாய்ப்பிழந்தது. ஆங்கில நாட்டவர் ஆட்சியின் விளைவாக நமது மக்கள் பயில நேரிட்ட ஆங்கிலமே மேல்நாடுகளில் வியத்தகு வளர்ச்சி பெற்று வந்த அறிவியல் கருத்துக்களை நாமறிய வாய்த்ததொரு வாயிலாக அமைந்தது. நம்மைப் பொறுத்தவரையில் 'ஆங்கிலமே' புத்துலக அறிவியல் ஒளி வழங்கிய பலகணியாகும்.

எழுத்தறிவு பெறாத மக்கள் பெரும்பான்மையினராக இருந்த நிலையிலும், ஏட்டறிவை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம் பெற முடியாத வறுமைச் சூழலிலும் - அறிவியல் கருத்துக்கள், விஞ்ஞான விளக்கங்கள் மக்களைச் சென்றடையவில்லை. மக்களின் பலவகை மூடநம்பிக்கைகள் ஒரு வகையில் அறிவு நாட்டத்திற்குத் தடையாயிற்று எனினும், அறிவியல் உண்மை விளக்கங்கள் தாய்மொழியில் விளக்கப்படாமையே அடிப்படைக் காரணமாகும். கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பள்ளி மாணவர்கள் அறிவியல் சார்ந்த கல்வியைத் தமிழிலேயே பயில்வதற்கு வழிசெய்யும் முயற்சியாகப் பலநூறு ஏடுகள் தமிழில் வெளிவந்துள்ளன. கல்லூரியில் பயிலும் மாணவர் களுக்கான உயர்கல்வி ஏடுகளும் பல இயற்றப்பட்டுள்ளன. ஆயினும் பல்கலைக் கழகப் பட்டப்படிப்பு அனைத்தையும் தமிழிலேயே பயிலச் செய்யும் அளவிற்கோ, மாணவர்களே பயில முன்வரும் அளவிற்கோ பல்கலை அறிவியற் பாடங்கள் அனைத்தும் தமிழில் வெளிவருவதற்கான முயற்சி தொடர வேண்டியுள்ளது. மருத்துவம், பொறியியல், உயிரியல், வேதியியல், இயற்பியல், கால்நடை மருத்துவம் முதலான துறைகள் பலவற்றையும் தமிழில் வழங்கச் செய்யும் நோக்கம் நிறைவேற வேண்டுமெனில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் அறிவியல் ஆய்வுக் கண்டுபிடிப்புகளால் நாள்தோறும் வெளி-