பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
33

சொல் தொகுப்பு நூலை' தனியொருவராக முயன்று, பாராட்டத்தக்க முறையில் நிறைவேற்றியிருப்பது தமிழர் அனைவர்க்கும் மகிழ்ச்சி தரக்கூடியது. துறை வல்லுநர்கள் கூட அவரவர் துறைகளில்தான் சிந்தனையாளராகத் திகழ முடியும். ஆனால் பல மருத்துவப் பிரிவுகளுக்கும் உரிய கலைச்சொல்லாக்கங்களை கண்டிருப்பதன்மூலம் இம் முயற்சியில் திரு. மணவை முஸ்தபா அவர்கள் தமிழறிவுடன் மருத்துவ அறிவையும் எவ்வளவு ஆழ்ந்து நுணுகிக் கற்றுத் தேர்வுபெற்றுள்ளார் என்பது அனைவரையும் வியக்க வைக்கும்.

ஆங்கிலத்தில் இவ்வகையான அகராதி-களஞ்சிய நூல்கள் பல இருப்பினும் இந்திய மொழிகளுள் இதுவே முதலாவதான முயற்சியாய் இருக்கக்கூடும் என்று நம்புகிறேன். ஒரு சொல் மூலம், ஒரு மருத்துவச் செய்தியைக் கூறுவதன் மூலம் சாதாரணப் படிப்பறிவு உள்ளவர்களும் மருத்துவ அறிவு பெறவும் அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் துணை செய்வதாகும்.

இந்நூலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பம்சம் பல இடங்களில் தெளிவான படங்களையும், பட விளக்கங்களையும் கொண்டமைந்திருப்பதாகும். எல்லா வகையிலும் நூல் சிறப்பாக அமைய வேண்டும் என்னும் ஆசிரியரின் வேட்கையை இது புலப்படுத்துகிறது. இந்நூல்வழி மேலும் தொடர்ந்து வளம் பெற்று அவர் வழியில் இன்னும் பலர் மருத்துவத் தமிழ் நூல்களை இயற்றித் தமிழ் மொழி ஏற்றத்தை விரைவில் எய்த வேண்டும் என்பதே அனைவரின் ஆவலாகவும் இருக்கும். அவர் முயற்சியும் அவரால் தூண்டப்பட்டு மேலும் பலர் செய்யப்போகும் முயற்சிகளும் வெற்றி பெற வேண்டி வாழ்த்துவோம்.

பேராசிரியர் டாக்டர் லலிதா காமேசுவரன்
(மேனாள் துணைவேந்தர்,
ஸ்ரீராமச்சந்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)