உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

13

கொண்டிருந்தனர். அவர்களுடைய வழக்க வொழுக்கங்களெல்லாம் பாண்டி நாட்டிலுள்ள வேளாளர்களுடைய வழக்க வொழுக்கங்கள். அவர்களுடைய குடும்பத் தெய்வங்கள் பாண்டி நாடு முதலிய இடங்களில் இருந்தன. அவர்களுடைய கொள்வினை கொடுப்பு வினையெல்லாம் பாண்டி முதலிய நாட்டிவரோடு நிகழ்ந்தன. அவர்கள் தாய்மொழி தமிழ்: அவர்கள் போற்றி வந்த இலக்கியங்கள் தமிழிலக்கியங்கள்; அவர்களுடைய ஆசா பாசமனைத்தும் அப் பாண்டி முதலிய நாடுகளோடு பின்னிக் கிடந்தன. இந்த நிலையில் அவர்களைத் தமது நாட்டு நிலைக் குடிகளாகச் செய்துவிட வேண்டுமென்று ஒரு சேர அரசர் எண்ணியது முற்றும் இயல்பேயன்றோ?

இதற்கேற்ப, கர்ண பரம்பரைச் செய்தியொன்று நாஞ்சினாட்டு வேளாளரிடை வழங்குகிறது. அவர்கள் தங்களுடைய பூர்வீக நாட்டிற்குப் போய்விடாதபடி ஒரு சேர அரசன் மருமக்கள்-தாயச் சட்டத்தை அவர்கள் மேற்கொள்ளும்படி செய்தனனென்பதுதான் இக்கர்ண பரம்பரை. இந்தச் செய்தி உண்மையாயின், இது அரியதோர் அரசியற் சூழ்ச்சியாகும். வேறொரு செய்தியும் வழங்குகின்றது. பாண்டியனொருவனுக்கும் சேரனொருவனுக்கும் இந்நாஞ்சினாட்டின் உரிமையைப்பற்றி விவாதம் நிகழ்ந்தது.

வஞ்சி நாடதனில் நன்செய் நாடு எனச்
செந்தமிழ் வழங்குந் தேயமொன்றுஉளது; அதன்
அந்தம்இல் பெருவனம் அறியார் யாரே?
மருதமும் நெய்தலும் மயங்கி அங்கெங்கும்
புரையறு செல்வம் நிலையெற வளரும்
(II, i, 75-79)