உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

மருமக்கள்வழி மான்மியம்

என்று பாடுகிறார். வசைக்கூத்து என்ற நூலொன்றும் முற்காலத்து இருந்ததாகத் தெரிகிறது. கம்பராமாயணத்தில் பல இடங்களிலும் இவ் இகழ்ச்சியுரை மிக்க திறம்படக் கையாளப்படுகிறது. உதாரணமாக, இராவணனை நோக்கி அனுமன்.

அஞ்சலை யரக்க பார்விட்டு அந்தரம் அடைந்தா னன்றே
வெஞ்சின வாலி மீளான் வாலும்போய் விளிந்த தன்றே
அஞ்சன மேனியான்தன் அடுகணை யொன்றால் மாழ்கித்
துஞ்சினன் எங்கள் வேந்தன் சூரியன் தோன்றல் என்றான்.

(கம்ப. சுந்தர. பிணி வீட்டு.84)

இகழ்ந்து பாடுதலையே தமது தொழிலாகக் கொண்டு, அவ்வகைப் பாடலில் சிறந்துவிளங்கியவர் காளமேகம் என்று கூறுவர்.

கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும்—குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை யன்னம்
இலையிலிட வெள்ளி எழும்.

என்பது அவர் பாடல்களில் ஒன்று.

மேற்காட்டியன போன்ற இகழ்ச்சியுரைகளெல்லாம் யாரேனும் ஒருவரைக் குறித்துத் தோன்றியவை. கணநேரந் தோன்றும் மனவேறுபாட்டுக்கு ஒரு போக்கிடமா யமைந்தவை; பொருள் அற்றவை ; நன்மை அற்றவை; வசையென்ற அளவில் நல்லுணர்வுடையோரால் கொள்ளத் தகாதவை.

இகழ்ச்சியுரை வசையாக மாத்திரம் அமையாதபடி குற்றத்தைக் கண்டித்து நீக்குதலையே உண்மையான நோக்கமாகக் கொண்டதாயின் அப்போது அவ் இகழ்ச்சி ஒருபடி உயர்ந்து விடுகிறது. புராதன லத்தீன் ஆசிரியர்களுள் லுஸில்லஸ் என்பவர்தாம்