உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

31

துக்கிடமாகவும் உள்ளது. பின் குடும்பச் சண்டை முற்றிக் கோர்ட்டுச் சண்டையாக மாறிவிடுகிறது. முதலில் இருந்த வீறாப்புக்கள் வரவரக் குறைகின்றன; குடும்பச் சொத்துக் கரைந்துபோய் விடுகிறது: காரணவருக்குத் தேகவலிமை குன்றிவிடுகிறது; கவலையும் நோயும் பீடிக்கின்றன. முடிவில்,

படிப் படியாய் இப்படி அவர் பாடு
குறைந்து குறைந்து கொண்டே வந்தது;
அண்டை வீடாகி, அறைப்புரை யாகி;
படிப்புரை யாகிப் பாயிலும் ஆனார்;
எழுந்து நடக்க இயலா தானார்?
நடந்தவர் கீழே கிடந்தார், அம்மா!

நோயும் பாயுமாய்க் கிடந்த இக்காரணவருக்கு இரண்டு மனைவியர்களே கடைசிக் காலத்தில் உதவியவர்கள். கடைசிக் காலமும் அமைதியாய்க் கழிந்த பாடில்லை. அவரது தங்கையும் மருமகனும் இருக்கிற பொருள்களைக் காவல் செய்துவைப்பதற்கு வந்து சேர்ந்தார்கள். மருமகனிடத்தில் நல்ல வார்த்தை சொல்லித் தன் மனைவி மக்களைக் காப்பாற்றும்படி சொல்லுகிறார். தங்கை இதைக் கண்டு மிகவும் கோபித்து வைப்புத் திட்டங்களெல்லாம் பூட்டி முத்திரையிடச் செய்கிறாள். கதையைச் சொல்லிவரும் ஐந்தாம் மனைவி,

கணவர்க்கு அந்திய காலம் தண்ணீர்
குடிக்கும் பாத்திரம் குடுக்கை ஆனதும்
பரந்த சட்டி படிக்கம் ஆனதும்
பாலும் அன்னப் பாலே ஆனதும்

எண்ணி யெண்ணி நெஞ்சம் குமுறுகிறாள். எல்லாவற்றிற்கும் மேலாகத் தன் கணவனது அந்திய நிலையில் அவரது ஆத்ம சாந்திக்குத் திருவாசகம் படிக்கத்