உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
231

எழுப்பி மேலே தென்னங்கீற்று பனையோலை விழல் முதலியவற்றாற் கூரைவேய்ந்து, அடிநிலத்தையும் மண்ணால் மெழுகிக் காற்றும் வெளிச்சமும் நன்றாய் உலவும்படி அமைத்த வீடுகளிற் குடியிருக்கும் மாந்தர்கள் நோயற்ற வாழ்வுடையராய் இருப்பார்கள். நகரங்களில் உயர்ந்த அழகிய மாளிகைகளில் இருப்பவர்களைப் பார்க்கிலும் நாட்டுப் புறங்களிற் புல்வேய்ந்த மண்வீடுகளில் உறைபவர் நீண்டகாலம் நோயின்றி உயிர்வாழ்தல் எவரும் அறிந்ததேயாம். அஃது உண்மையே யென்றாலும், மண் வீடுகள் காற்றுக்கும் மழைக்குங் கெடாமல் நீண்டநாள் இருத்தல் கூடாமையாலுஞ், செல்வமும், நாகரிகமும் அவற்றிற்கேற்ற செயல்களும் பெருகப்பெருகச் செங்கற் சுண்ணாம்புகளால் அழகிய அகன்ற உயர்ந்த மாடங்களும் மாளிகைகளும் அமைத்து அவற்றில் உயிர்வாழ்தல் அறிவுக்கும் உலகவழக்கிற்கும் இசைந்ததாய் இருத்தலாலும் எல்லாரும் மண் வீடுகளில் உறைவதே நன்றென்று கூறுவது என்னையெனின்; நாகரிக வளத்திற்கேற்பச் சிறந்த மாளிகை வீடுகளிற் குடியிருத்தல் இசைவதேயாயினும், உடம்பை நீண்டகாலம் பேண வேண்டுவோர்க்கு இடையிடையே நாட்டுப்புறங்களிற் போய் மண்வீடுகளிற் சில பல நாட்கள் தங்கிவருதலும் இன்றியமையாததேயாம். அவ்வாறின்றிக் குடிமக்கள் நெருங்கியுள்ள பட்டினங்களில், எத்துணை தான் சிறந்த மாளிகைகளேயாயினும் அவற்றின்கண் ஒரு தொடர்பாய் இருத்தல் உடம்பைப் பழுதுபடுத்துதற்கே இடமாகும் பட்டினத்து வீடுகளில் நீண்டகாலம் இருந்தவர்க்கு நோய் வருதலும், வந்த அந்த நோய் தீரும்பொருட்டு அவரை நாட்டுப்புறங்களிற் சென்று இருக்கும்படி மருத்துவர் அறிவுறுத்தலும், அதன்படி அவர் ஊர்ப்புறத்துள்ள வீடுகளிற் சென்று இருந்தமாட்டாலே அவர்க்குள்ள நோய் நீங்குதலும் நாம் இங்கே சொல்லிய உண்மையினை நிலைநாட்டுவன வாகும். ஆகவே, செல்வர்களாய் உலக முயற்சியிற் பெரிதுந் தலையிட்டிருப்பவர்கள் தமது முயற்சி நடைபெறுதற்கு இடமான நகரங்களிற் பெரிய மாளிகைகள் அமைத்தி ருந்தாலும், இடையிடையே நாட்டுப்புறங்களிலுஞ் சென்று இருத்தற் பொருட்டுப் புல்வேய்ந்த மண்வீடுகளும் அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். நகரங்களுக்குத் தொலைவிலுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/264&oldid=1597775" இலிருந்து மீள்விக்கப்பட்டது