உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

  • மறைமலையம் – 11

சமயத்திலிருந்து வருவாரை நம்முடன் சேர்த்துக்கொண்டு எவ்வகை வேறுபாடுமின்றி அளவளாவுதல் வேண்டும்.

இவர் தீண்டத்தக்கார் இவர் தீண்டத்தக்காதவர் என்னும் போலி வேறுபாடுகளை அறவே ஒழித்துக் கோயில்களிலும் கல்விச்சாலைகளிலும் எல்லார்க்கும் ஒத்த உரிமை கொடுத்தல் வேண்டும்.இதற்கு இன்றியமையாதனவான சைவ உணவு எடுத்தல், குளித்து முழுகித் துப்புரவாய் இருத்தல், நோய்க்கு இடங் கொடாமை முதலான நலம் பேணும் முறைகளை எல்லாரும் உணர்ந்து நடக்கும்படி அவற்றைத் துண்டுத் தாள்களிலும் விரிவுரைகளிலும் ஆங்காங்குப் பரவச்செய்தல் வேண்டும்.

கல்வியிலும் உடம்புநலத்திலும் நல்லொழுக்கத்திலும் மேன்மேல் உயர்வதற்குப் பெருந்தடையாய் உள்ள சிறுபருவ மணத்தை அறவே ஒழித்தல் வேண்டும். பெண்மக்களுக்கு இருபதாண்டும் ஆண்மக்களுக்கு இருபத்தைந்தாண்டும் நிரம்பும்முன் அவர்களை செய்வித்தல் ஆகாது. அங்ஙனம் மணஞ்செய்யுமிடத்தும், ஒருவரை ஒருவர் அன்புபாராட்டுதல் அறிந்து அதன்பின் அவர்களை மணம் பொருத்தல் வேண்டும். ஆணையாவது பெண்ணையாவது ஆடு மாடுகளைப்போல் விலை கொடுத்து வாங்குங் கொடியவழக்கத்தை வேரோடு களைவதற்கு எல்லாரும் மடிகட்டி நிற்றல்வேண்டும். ஏனென்றால் அன்பில்லாத வாழ்க்கையால் வருந்தீமைகள் அளவில்லாத வைகளாய் இருக்கின்றன. அன்பில்லாத சேர்க்கையிற் பிறக்கும் பிள்ளைகள் குறுகிய வாழ்நாளும் பல தீயதன்மைகளும் உடையராய் இருக்கின்றனர். அன்பு வளர்ச்சிக்கு ஏதுவாக ஆண்மக்களும் பெண்மக்களுங் கள்ளங்கவடின்றி நடமாடச் செய்தல் வேண்டும். பெண்மக்களைக் கல்வியிலும் நன் முறையிலும் பழகவிடாமல், மணங்கூடும்வரையில் அவர்களை அறைகளில் அடைத்து வைப்பது பெருந்தீமைகளை விளைவிக் கின்றது. பெண்மக்களைப் பெரும்பாலுந் தமிழ்முதலிய தாய்மொழிக் கல்லூரியிலேயே கல்வி பயிற்று வித்தல் வேண்டும். உணவமைத்தல் இல்லறம் நடப்பித்தல் குழந்தைகளைப் பாதுகாத்தல் முதலிய முறைகளில் தேர்ச்சிபெறவேண்டுவது பெண்மக்களுக்கு இன்றியமையாததாகும். ஆ ஆண்மக்கள் தாய்மொழியோடு மற்ற மொழிகளையும் நன்கு பயிலச் செய்தல் வேண்டும்.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/297&oldid=1580258" இலிருந்து மீள்விக்கப்பட்டது