உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

  • மறைமலையம் -18

ஒருவராய்த், தாந்தாம் வல்ல துறையில் அவ்வரசிளைஞனை டைதருமாறு வினவ, அவனும் அவர் வினாவிய பொருள்கட் கெல்லாம் பெரும்பாலும் பிழைபடாமல் ஏற்ற விடை சொல்லிவந்தான். இவ்வாறாக, அவரெல்லாம் அவனை ஆராய்ந்து பார்த்தபின், அவனது நுண்ணிய கலைப் புலமை யினையும், அதனை அவற்குப் புகட்டிய ஆசிரியனது திறத்தினையும் அவ்வரசவையிலுள்ளார் அனைவரும் மிக வியந்து பேசி மகிழ்ந்தனர்.

இவ்வாறாக, அவ்வரசிளைஞனின் கலைப் புலமை யினை அனைவரும் அறியக்காட்டிய பின், ஆசிரியன் தன் கையிற் பிடித்திருந்த பிரப்பங்கோலுடன் அவ்விளைஞனை அணுகி, அவன் துடிதுடிக்க அதனால் அவனை நையப்புடைத்தனன். அரசன் தன் மகனைத் திடீரென ஆசிரியன் அங்ஙனம் புடைத்தமை கண்டு நெஞ்சம் உளைந்து அடங்காச் சினங் கொண்டவனாய்த் தன் அமைச்சனை நோக்க, அமைச்சன் அரசனது சினக்குறிப்பைக் கண்டு, “மன்னர் பிரானே, சிறிது மனம் பொறுத்தல்வேண்டும். ஆசிரியர் இவ்வாறு செய்ததற்குத் தக்கதொரு காரணம் இருத்தல் வேண்டும்” எனப் புகன்றனன். உடனே, ஆசிரியன் அரசனை நோக்கி வணங்கி, "அண்ணலே, தங்கள் அருமைப் புதல்வனை இவ்வரசவையில் தங்கள் கண்ணெதிரே யான் அடித்து வருத்தின செயலைப் பொறுத் தருளல்வேண்டும். இப்புதல்வனைத் தாங்கள் என்னிடம் ஒப்புவித்த காலத்திருந்து கண்ணை இமைகள் காப்பதுபோல் அத்துணைக் கருத்தாய் இவனைக் காத்து இவனுக்குக் கலைகளைப் புகட்டிவந்தேன், அதனால் இவனுக்குத் துன்பம் இன்னதென்றே தெரியாது. துன்பந்தெரியாத நிலையில் இவன் அரசுக்கு வந்தாற், குற்றவாளிகள் செய்யுங் குற்றங்களின் சிறுமை பெருமைக்குத்தக அவர்களை ஒறாமற், சிறிய குற்றஞ் செய்பவர்க்குப் பெரியதோர் ஒறுத்தலைச்செய்ய ஏவி விடுவன். ஆதலால் தன்னால் முறைசெய்து ஒறுக்கப்படுவார்க்கு உளதாந் துன்பத்தின் கொடுமையினைத் தான் நன்குணர்ந்து கொள்ளும் பொருட்டாகவே இவனை இங்ஙனம் இக்கோலாற் புடைத்து வருத்தினேன். எல்லாங் கற்பித்தும் இதனை யான் கற்பியா விட்டால், இவனாற் குடிமக்கட்கு அளவிறந்த துன்பம் விளையுமன்றோ? இப்போது இவனுக்குத் துன்பத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/250&oldid=1585395" இலிருந்து மீள்விக்கப்பட்டது